`அன்று இரவே முடிவுசெய்தேன்..!’ – மனைவியை விற்க முயன்ற கணவனின் பகீர் வாக்குமூலம்

ரூ.1.2 லட்சத்துக்கு மனைவியை விற்பனை செய்யவிருந்த நபரை போலீஸார் டெல்லியில் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.

பாலியல் - டெல்லி

பூஜாவின் அழகில் மயங்கிய ரன்வீர் (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது), அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். அப்போது, பூஜாவுக்குத் தெரியாது அவரின் அழகே அவருக்கு வினையாகிவிடும் என்று. டெல்லியில் வசித்துவரும் பூஜாவின் குடும்பத்தினரை ஆச்சர்யத்தில் மூழ்கச் செய்வதாகக்கூறி, பீகாரிலிருந்து டெல்லிக்குப் பூஜாவை ரயிலில் அழைத்து வந்துள்ளார் ரன்வீர். இந்நிலையில், டெல்லி ரயில்நிலையத்தில் ரன்வீரை போலீஸார் கைது செய்தனர். பாலியல் தொழிலுக்காகத் தன் மனைவியை விற்பனை செய்ய முயன்றதுக்காக அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவரிடம், நடத்திய விசாரணையில், `பூஜாவின் அழகில் மயங்கியதால், அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டேன். அவ்வளவு அழகாக இருப்பாள் பூஜா. இதனால், மற்ற ஆண்கள் அவளின் அழகில் மயங்கிவிடக் கூடாது என்று தீர்க்கமாக இருந்தேன். அவள், எங்கு சென்றாலும் நானும் கூடச் செல்வேன். பூஜா வீட்டில் தனியாக இருக்கும் வேளையிலும் அவளைக் கண்காணித்து வந்தேன். ஒரு முறை துணிகளை விற்பனை செய்ய வியாபாரி ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் பூஜா பேசிக்கொண்டிருந்தாள். இதற்காக, அவளிடம் கடுமையாகச் சண்டை போட்டேன். அன்று, இரவே அவளைக் கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், பூஜாவை கொலை செய்தால் தன் வாழ்க்கை சிறையில் முடிந்துவிடும் என்று யோசித்தேன். அதனால், அவரை பாலியல் தொழிலுக்காக டெல்லியில் விற்பனை செய்துவிடலாம் என்று திட்டம் தீட்டினேன். இது பூஜாவுக்குத் தெரியாது. இதையடுத்து, பாலியல் தொழிலுக்காகப் பெண்களை விலைக்கு வாங்கும் தரகர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம், ரூ.1.5 லட்சத்துக்கு பூஜாவை விற்க முடிவு செய்தேன். நடைபெற்ற பேரத்தில் ரூ.1.2 லட்சத்துக்கு பூஜாவை விற்பனை செய்தேன். 10-ம் தேதியில் பூஜாவை ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தேன். அதன்படியே, அவளை டெல்லிக்கு அழைத்து வந்தேன்’ என்றார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘ரன்வீர் திட்டம் குறித்து போலீஸ் இன்ஃபார்மர் ஒருவர் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பூஜாவை எங்களால் மீட்க முடிந்தது. டெல்லி ரயில் நிலையத்தில் வந்தவுடன், ரன்வீரை கைது செய்ய முடிவு செய்தோம். இது அவருக்குத் தெரியாது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

பூஜா கூறுகையில், `எப்போதும், ரன்வீர் என்னிடம் கடுகடுத்து வருவார். வாரத்தில் இரண்டு முறை தன், முதல் மனைவி மற்றும் அவரின் மூன்று குழந்தைகளைப் பார்க்கச் சென்றுவிடுவார். இதன் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்றார் ஆதங்கத்துடன்.