வட்டுக் கிழக்கு, ஜனசக்தி கிராமப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மர்ம உருவங்கள் என்று சொல்லப்படும் நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் தாம் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கும் மக்கள், குறித்த உருவங்கள் மிகவும் குள்ளமாகவும் கறுப்பு நிறத்தை முகத்தில் பூசிக்கொண்டிருப்பதாகவும் கண்ணால் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நேற்றைய தினமும் இரவு 7.45க்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த மர்ம உருவங்கள் நடமாடியதாக தகவல் பரிமாறியதையடுத்து மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை அராலிப் பகுதியில் ஏற்பட்ட மர்ம மனிதர் பிரச்சினை, பின்னர் முதலியார் கோவில், துணவி, செட்டியார்மடம் என பரவி தற்பொழுது வட்டுக்கோட்டை கிழக்கு ஜனசக்தி கிராமத்திற்கும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் வட்டுக்கோட்டை பொலிஸாரின் எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதிகளில் அவ்வாறான மர்ம உருவங்கள் இல்லை என தெரிவித்திருக்கும் பொலிஸார், அதுகுறித்த வதந்திகளைப் பரப்புவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.