மதுவால் பகையான நட்பு – பிரான்ஸ் நாட்டவர் எரித்துக்கொலை

பட்டுக்கோட்டை அருகே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரை எரித்து, மூன்று துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவருக்கும் பிரான்ஸ் நாட்டுப் சுற்றுலாப் பயணி பீட்டர் என்கிற பாரி பூவுடர் என்பவருக்கும் இடையே கடந்த ஐந்து வருடமாக நட்பு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி திருச்சி வந்த பீட்டர், திருமுருகனுக்குப் போன் செய்து உங்கள் ஊரைச் சுற்றிப்பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி திருச்சி சென்று திருமுருகன் அவரை அழைத்து வந்து மன்னார்குடி பெரிய கோயிலை சுற்றிக் காட்டியிருக்கிறார். பின்னர் மீண்டும் சொந்த ஊரான ஆவிக்கோட்டை கிராமத்திற்கு சென்று இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது பீட்டருக்கும், திருமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் தாக்கிக்கொண்டதில் பீட்டரின் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரான்ஸ்
இதனையடுத்து அவரது உடலை பெட்ரோலை ஊற்றித் தீ வைத்து எரித்துள்ளார். உடல் முழுவதும் எரியாத நிலையில் அதனை மூன்று பாகமாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வாட்டாக்குடி உக்கடை கிராம நிர்வாக அலுவலரிடம் திருமுருகன் சரணடைந்தார். அவர் திருமுருகனை மதுக்கூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமுருகன் அளித்த தகவலின் பேரில் வாட்டாக்குடி உக்கடை வாய்க்கால் பகுதிக்கு சென்ற காவல்துறையினர். பீட்டரின் சடலத்தை கைப்பற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இது குறித்து தஞ்சை எஸ்.பி.,செந்தில்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.