கடலூர் மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாக அவர்கள் குடும்பத்துடன் விருந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் 300க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகள்.
சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாக அவர்கள் குடும்பத்துடன் விருந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். இந்த 27 பேரும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களை நேற்று சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். சிறையில் சமைத்த உணவினை அவர்களுக்கு ஊட்டி விடுவது, குழந்தைகளுடன் கொஞ்சி பேசியது மற்றும் வயதான தாயின் மடியில் உறங்குவது போன்ற உணர்ச்சிகரமான புகைப்படங்களை கடலூர் மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பல்வேறு சூழ்நிலைகளால் குற்றங்களில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்று வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் இவர்களுக்கு இது போன்ற ஒரு வாய்ப்பு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். கணவனை மனைவி பார்க்காமலும், குழந்தைகள் தந்தையை பார்க்காமலும், வயதான பெற்றோர் மகனை சந்திக்காமலும் வாழ்ந்து வந்த நிலையில் என்ன தான் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே அவர்களுக்குள்ளும் ஆசை, பாசம் இருக்கத்தானே செய்யும். இந்த சந்திப்பின் மூலம் இருத்தரபினரும் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதே உண்மை.