கணித பாடத்தில் ஏ சித்தி பெற்றுத் தரும் வகையில் கற்பிப்பதாக கூறி இரண்டரை வருடங்களாக மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் சகோதரனுக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம நகரத்தில் மேலதிக வகுப்பிற்காக இந்த மாணவி மாத்திரம் அழைக்கப்பட்டு தொடர்ந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மாணவி கர்ப்பமாவதை தவிர்ப்பதற்காக அவருக்கு மாத்திரை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி பாடசாலை ஒன்றின் அதிபராக செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
மாணவிக்கு தவறான வீடியோக்களை காட்டி அச்சுறுத்தி அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான ஆசிரியர் கடந்த 10ஆம் திகதி குறித்த மாணவிக்கு தொலைபேசி அழைப்போன்றை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் சந்தேகமடைந்த மாணவியின் சகோதரன் அவரிடம் வினவியுள்ளார்.
இதன் போது அவர் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளார். பின்னர் மாணவி களுத்துறை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான 52 வயதுடைய ஆசிரியர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது குறித்து பெற்றோர் அதீத கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.