அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அரசியல். அதில் அண்ணன் என்ன… தம்பி என்ன… நண்பன் என்ன… அரசியலின் விதி. திராவிட கட்சிகள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க சின்னாபின்னமாகச் சிதறிக்கிடக்கிறது. இப்போது, கருணாநிதியின் மறைவை அடுத்து, தி.மு.க உள்ளுக்குள் லேசாக விரிசல்விடத் தொடங்கியிருக்கிறது. இதுவரை உள்ளுக்குள் புகைந்துகொண்டிருந்த அழகிரி விவகாரம், இப்போது வெளியில் நெருப்புப் பொறி காட்டத் தொடங்கியிருக்கிறது. இன்று, (ஆகஸ்ட் 13, 2018) காலை கருணாநிதி சமாதிக்கு தனது குடும்பத்துடன் அஞ்சலி செலுத்த வந்த அழகிரி கொஞ்சம் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் கொஞ்சம் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது.
பல ஆண்டுகளாக தி.மு.க-வுக்கு வெளியில் உள்ளவர்களாலும், உள்ளுக்குள் உள்ளவர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அதிரடியின் ஆரம்பம், ஜூலை 28-ம் தேதி கருணாநிதி காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து வெளிப்படத் தொடங்கியது. மருத்துவமனையில் அழகிரியைச் சந்தித்த கட்சிக்காரர்களை அவர் கலாய்த்துக்கொண்டிருந்தார். குடும்ப உறுப்பினர்களிடம் மறைமுகமாக எதையோ உணர்த்திக்கொண்டிருந்தார். அங்கு தனித்தனி அறையில் தஞ்சம் புகுந்திருந்த கருணாநிதி குடும்பத்தினரில், அழகிரியையும் ஸ்டாலினையும் தனித்தனியாகவே அரசியல் புள்ளிகள், வி.வி.ஐ.பி-க்கள் சந்திக்க முடிந்தது.
மருத்துவமனைக்குள் ஸ்டாலின் அனுமதிக்காதவர்களை அழகிரி வரச் சொன்னார். அழகிரி வரச் சொன்னவர்களை ஸ்டாலின் ஆட்கள் தடுத்து நிறுத்தினர். அங்கேயே கருணாநிதியின் தி.மு.க ஸ்டாலின் தி.மு.க, அழகிரி தி.மு.க என நிறம் காட்டத் தொடங்கியது. 30-ம் தேதி இரவு சரியாக 9.45 மணிக்கு ஸ்டாலின் மருத்துவமனையை விட்டு வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார். காருக்கு இருபக்கமும் நின்றிருந்த தொண்டர்கள் “கலைஞர் வாழ்க… தி.மு.க வாழ்க… கலைஞரே வா… எங்களை ஆள வா…” என்றவாறு கோஷமிட்டனர். ஸ்டாலினைத் தொடர்ந்து சரியாக 10 மணியளவில் மு.க அழகிரி மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். அவர் வரும்போது காருக்கு இருபக்கமும் இருந்த தொண்டர்கள் கோஷம் எழுப்பவில்லை. ஆனால், திடிரென சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் காருக்கு முன்னே வந்து “வருங்கால முதல்வரே வாழ்க… வருங்கால தி.மு.க.வே வாழ்க” எனச் சொல்லிக்கொண்டே காருக்கு முன்பு கீழே விழுந்து அழகிரியை வணங்கினார்கள். சில வினாடிகள் கழித்துத்தான் அழகிரியின் கார் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. வெளிப்படையாக நடந்த சம்பவம் தி.மு.க-வுக்குள் புகைந்துகொண்டிருந்த நெருப்பின் பொறியை வெளிப்படையாகப் பறக்கவிட்டது.
இதுபோன்ற சூழல்களுக்கு இடையில்தான், இன்று (13-08-2018) கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த தனது குடும்பத்துடன் வந்தார் அழகிரி. அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அழகிரி “நான் எங்க அப்பாகிட்ட என்னுடைய ஆதங்கத்தை வேண்டியிருக்கேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போ உங்களுக்குத் தெரியாது. கட்சி சம்பந்தப்பட்டதுதான் இது. நான் இப்போ தி.மு.க.,வில் இல்லை. அதனால், செயற்குழு பத்தியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்.” என்று சொல்லிவிட்டுச் சென்றார் அழகிரி. அழகிரியின் இந்தச் செயல் தி.மு.க.வை மட்டுமல்ல… தமிழக மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தம் தமிழகம் அறிந்தது. அது சீசன் 1. தற்போது பேசத் தொடங்கியிருக்கும் அழகிரியின் சர்ச்சை பேச்சுகள் தர்மயுத்தம் சீசன் 2 ஆக இருக்கமா; இல்லை சாதாரண சர்ச்சையாக முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.