‘என் கல்யாணத்தை நடத்தி வைச்சுட்டு கலைஞர் சொன்ன கதை என்ன தெரியுமா?!” – தமிழிசை

மருத்துவமனையில் அவரைச் சந்தித்தபோது, ‘எங்கள் குடும்பத்தில் நடக்கும் மற்ற திருமணங்களுக்கும் நீங்கள் தலைமை தாங்குவீர்கள்’ என்றேன். அவருக்கே உரிய தொனியில் புன்னகையை உதிர்த்தார்.

தமிழக அரசியலின் முதுபெரும் தலைவர் மு.கருணாநிதியின் மறைவு, அரசியல் வட்டாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன், கருணாநிதியுடனான தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

”கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்ததிலிருந்தே, என்னுடைய திருமணம் நிகழ்வுதான் நிழலாடிக்கொண்டிருக்கிறது.

அந்தத் திருமண நிகழ்வில், அரசியல் கூட்டம்போல கரை வேட்டிகள் பலரும் அரசியல் பேசியபோது, கரகர குரலில் கூட்டத்தைக் கட்டிப்போட்டது ஒரு கதை.

‘ஒரு குவளையில் ஒரு மடக்கு தண்ணீர் இருக்கிறது. அதை ஆண் மான் குடிக்கட்டும் எனப் பெண் மானும், பெண் மான் குடிக்கட்டும் என ஆண் மானும் தண்ணீர் குடிக்காமல், பாவனைச் செய்துகொண்டிருந்தன.

இதுதான் வாழ்வை கட்டிப்போடச் செய்யும் அன்பு. அந்த மான்கள்போல நீங்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் உணர்வுடன்  இருக்க வேண்டும்” என வாழ்த்தினார் கலைஞர் கருணாநிதி. அதுபோலவே இத்தனை வருடங்களை கடந்திருக்கிறோம்.

என் அப்பா அரசியல்வாதி என்பதால், எப்போதும் அரசியல் பேச்சுக்களே என் காதில் விழுந்துகொண்டிருக்கும். அப்போது, என் வயதுடையவர்கள் தூர்தர்ஷனில் ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலுடன்  காத்திருப்பார்கள்.

நானோ, சட்டமன்ற நிகழ்வுகளைக் காண காத்திருப்பேன். தன்னுடைய கருத்துக்களை எளிமையாக எடுத்துரைக்கும் தலைவராகத்தான் கருணாநிதி எனக்கு அறிமுகமானார்.

நாளடைவில் அவரின் சொல்லாடலுக்கு  ரசிகை ஆகிப்போனேன். இதுதான் அரசியல் என்ற தெளிவு வருவதற்கு முன்பே, இவர்தான் கலைஞர் என என் மனதில் ஆழமாகப் பதிந்தவர் அவர்.

நான் இளநிலை மருத்துவம் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, தமிழ் மன்றத்தின் சார்பாக, கலைஞரைப் பேச அழைத்திருந்தோம்.

அப்போது சன்னல், காற்று என்ற இரு தலைப்புகளில் கவிதை கூற வேண்டியவர்கள் வரவில்லை. அதற்கு கருணாநிதி கூறிய உவமை, என்னை ஆச்சர்யத்தின் உச்சிக்குக் கொண்டுசென்றது.

“இது குளிர்சாதன அறை. சன்னல் இல்லாததால் காற்றும் வரவில்லை” எனச் சூழலுக்கு ஏற்ப நகைச்சுவையுடன் விளக்கம் கொடுத்தார்.

இதுதான் அவர் எழுதிய புத்தகங்களை தேடவைத்தது. எனக்கான ஆளுமைத்திறனை, பாதி என் அப்பாவிடமிருந்தும், மீதி கலைஞரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன்.

 79_thumb_17469 'என் கல்யாணத்தை நடத்தி வைச்சுட்டு கலைஞர் சொன்ன கதை என்ன தெரியுமா?!'' - தமிழிசை 'என் கல்யாணத்தை நடத்தி வைச்சுட்டு கலைஞர் சொன்ன கதை என்ன தெரியுமா?!'' - தமிழிசை 79 thumb 17469