சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மறைந்து ஒரு வாரமே ஆன நிலையில், அவரது குடும்பத்திற்குள் பதவி சண்டை தலை தூக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இது, இன்றைய மு.க.அழகிரியின் மெரினா கடற்கரை பேட்டியின் வாயிலாக வீதிக்கு வந்துள்ளது.
கடந்த 7ந்தேதி மறைந்த கருணாநிதியின் உடல் 8ந்தேதி மாலை மெரினா கடற்கரை அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 3வது நாளான கடந்த 9ந்தேதி, கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும், அவரது நினைவிடத்தில் ஒட்டுமொத்தமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் மகளான செல்வி, முரசொலி செல்வம், ராஜாத்தியம்மாள், ஸ்டாலின், அழகிரி, தமிழரசு, கனிமொழி உள்பட பலர் ஒரே மாலையைத் தொட்டு கலைஞரின் நினைவிடத்தில் அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதியின் முதல்மனைவியின் மகன் மு.க.முத்து மட்டும் மிஸ்ஸிங்.
கருணாநிதி மறைந்து இன்று 6வது நாள் நடைபெறு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சராகவும், திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்துள்ள கருணாநிதியின் மகனும், திமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் வந்து இன்று கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
தனது மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, திமுக கட்சிக்குள் வெடிகுண்டை வீசிவிட்டு சென்றுள்ளார்.
சமாதியில், “எனது ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்.. அது என்ன ஆதங்கம் என்பது உங்களுக்கு இப்போது தெரியாது… என்று பொடி வைத்து பேசிய அழகிரி, கலைஞரின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் அனைவரும் என் பக்கம் உள்ளனர். அவர்கள் என்னை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காலம் பதில் சொல்லும் என்று கூறி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளார்.
நாளை திமுக அவசர செயற்குழு கூட உள்ள நிலையில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேந்தெடுக்கப்படுவார் என்று திமுக தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நாளைய செயற்குழு குறித்து தனக்கு தெரியாது, நான் இப்போது திமுகவில் இல்லை .அதையெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்றவர், திமுகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அதற்கும் பதில் சொல்ல மறுத்து, தனது ஆதங்கத்தைக் கலைஞரிடம் சொல்லியிருக்கிறேன் என்று கூறி விட்டு சென்றார்.
மீண்டும் சென்னை கோபாலபும் கருணாநிதி வீட்டில், செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “கட்சி ரீதியான ஆதங்கம் குறித்து இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பதில் சொல்வேன்” என்று கூறினார்.
மு.க.அழகிரியின் இன்றைய பேட்டி, கருணாநிதி குடும்பத்திற்குள் நடைபெற்று வரும் பதவிச்சண்டையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக கோபாலபுரம் தகதகவென தகித்துக்கொண்டு இருக்கிறது.
நாளை நடைபெற உள்ள திமுக செயற்குழுவில், தற்போது செயல்தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினை தலைவராக்க ஒரு தரப்பினர் முயற்சிகள் மேற்கொள்ளும் நிலையில், அழகிரியின் அதை தடுக்கும் விதத்திலேயே உள்ளது. அழகிரியின் இன்றைய மல்லுக்கட்டு கருணாநிதியின் குடும் பத்தினர் மட்டுமின்றி திமுக விலும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
அழகிரி திமுக தென்மண்டல செயலாளராக இருந்தபோது, திமுகவில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினையும், திமுக தலைமையையும் கடுமையாக தாக்கிப் பேசியதால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2014 மார்ச் மாதம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், அழகிரியின் இன்றைய பேட்டி கருணாநிதி குடும்பத்தில் மீண்டும் பிரளயத்தை உருவாக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
கருணாநிதி உயிரோடு இருந்தவரை, மு.க.அழகிரியின் கோபத்தை கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது அவர் இல்லாத நிலையில், இன்று அவர் தனது சொந்த தம்பிக்கு எதிராக மல்லுக்கட்டி நிற்பது கருணாநிதி குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக, நாளை நடைபெற உள்ள திமுக செயற்குழுவில், அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஆனால், ஸ்டாலின் நலம் விரும்பிகள் அழகிரி கட்சிக்குள் வருவதை விரும்ப வில்லை என்றே கூறப்படுகிறது.
கட்சியில் இருந்து கருணாநிதியால் நீக்கி வைக்கப்பட்ட அழகிரி மீண்டும் கட்சி பதவியை கைப்பற்றவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று விமர்சிக்கப்படுகிறது.
தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் ரஜினிகாந்த் உடன் தொடர்பு கொண்டுள்ளனர், மேலும் கட்சி பதவிகள் விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கட்சியை அழிக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அவர்களை கலைஞர் ஆத்மா மன்னிக்காது என்று கூறி வருகின்றனர்.
கருணாநிதி மறைவை… சூரியன் மறைந்துவிட்டதாக கூறிவரும் திமுக தொண்டர் கள், உதய சூரியனுக்கு இருபுறமும் உள்ள இரு மலை முகடுகளாக ஸ்டாலின், அழகிரி இருவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் ஆசைப்படு கிறார்கள்…. என்ன நடக்கிறது… நடக்கப்போகிறது… என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…