`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்!’ – வைரலாகும் வீடியோ

இத்தாலியில் உள்ள பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாலம்

இத்தாலி நாட்டின் வடமேற்கு நகரமான ஜெனோவாவுக்கு அருகே நெடுஞ்சாலையில் உள்ள பிரதான பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கார்கள், லாரிகள், பேருந்துகள் சென்றுவருவது வழக்கம். இந்தப் பாலமானது தரையிலிருந்து 90 மீட்டர் (295 அடி) உயரத்தில், உள்ளது. அப்பகுதியில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையின் காரணமாக ஏற்பட்ட மின்னல் தாக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்தின் ஒருபகுதி உடைந்து விழுந்தது.

விபத்து

இந்த விபத்தில் 22 பேர் இறந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியிருக்கிறது. பாலத்தின் அடியில் இருந்த குடியிருப்புப் பகுதிகளின் மீது பாலம் இடிந்து விழுந்தது. இதில், வீடுகள் நொறுங்கியதுடன், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்திருக்கின்றன. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மொராண்டி பிரிட்ஜ் என்றழைக்கப்படும் இந்தப் பாலம் 1968ல் கட்டப்பட்டது. இத்தாலியையும், பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரங்களையும் இணைக்கும் முக்கியமான பாலமாக இது இருந்து வந்தது. இதனால், பாலத்தில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பாலத்தின் இடிந்துவிழுந்த பகுதி (சிவப்பு நிறமிட்ட பகுதி)

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பிரான்ஸ் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.