சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினருக்கும் இடையில் மோதலொன்று இடம்பெற்றிருக்கின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்டத்தின் மாவனல்லை தொகுதி நிர்வாக சபை தெரிவின் போது இந்த மோததல் இடம்பெற்றுள்ளது. மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த வண்ணம் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்படும் இருவர் அழையா விருந்தாளிகளாக மாவனல்லை தொகுதி நிர்வாக சபை தெரிவில் கலந்துகொண்டதை அடுத்தே கைகலப்பு இடம்பெற்றிருக்கின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாவனல்லை தொகுதியின் நிர்வாக சபையை தெரிவுசெய்யும் கூட்டம் நேற்று பிற்பகல் மாவனல்லை தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன மற்றும் மாவனெல்ல பிரதேச சபையின் உப தலைவர் கே.என்.பி பண்டார ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
எனினும் இந்த நிகழ்விற்கு தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என மாவனல்லை பிரதேச சபையைச் சேர்ந்த உறுப்பினர்களான எம்.எஸ்.எம். காமில் மற்றும் எம்.ஆர்.எம். அசாம் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முயற்சி செய்தனர். எனினும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர்களை மண்டபத்திற்குள் பிரவேசிக்க முடியாதவாறு மண்டபத்தின் வாயில் கதவை மூடியிருந்ததாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த இருவரும் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்திற்கு வெளியே நின்ற வேளையில், அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் அவர்களுடன் முரண்பட்டதுடன், தாக்குதலையும் நடத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த உறுப்பினர்கள் இருவருடனும் வருகை தந்த சிலர் தமது எதிர்ப்பினை தெரிவித்த நிலையில், அங்கு குழப்பகரமான சூழ்நிலையொன்று உருவாகியது.
இதனிடையே நிர்வாக சபையை தெரிவுசெய்யும் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சரான அதாவுத செனெவிரத்ன, குழப்பத்தை விளைவித்தவர்கள் மஹிந்த தரப்புடன் இணைந்து செயற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து பேசிய அவர், ”மாவனல்லை பிரதேச சபையைச் சேர்ந்த உறுப்பினர்களான எம்.எஸ்.எம். காமில் மற்றும் எம்.ஆர்.எம். அசாம் ஆகியோர் தற்பொழுது சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கும் பொதுஜண பெரமுனவுடன் இணைந்து எம்முடன் பிரிவினையை உருவாக்கிக் கொண்டனர். பொதுஜன பெரமுனவில் இணைந்த பலர் தற்போது மீண்டும் இருந்த கட்சிகளுக்கே திரும்புகின்ற நிலையில், அவர்களும் மீண்டும் எமது கட்சிக்கு வருவார்களாயின் பிரச்சினையில்லை. என்னுடன் அவர்கள் மோதினாலும் பிரச்சினையில்லை. மாறாக கட்சியுடன் பிரச்சினைக்குள்ளாவதை ஏற்க முடியாது. அது கட்சிக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும். எதிர்காலத்தில் எமது மாவனல்லை பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். என்டர்பிரைஸஸ் சிறிலங்கா திட்டத்தின் கீழ் ஆகக்குறைந்தது 100 வர்த்தகர்களுக்கேனும் நாம் உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான மாவனல்லை பிரதேச சபையைச் சேர்ந்த உறுப்பினரான எம்.எச்.எம். காமில் கருத்து தெரிவிக்கையில்,
”1996 ஆம் ஆண்டு முதல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக செயற்பட்டு வருகின்றேன். கடந்த தேர்தலின் போதும் அதிக வாக்குகளைப் பெற்றது நானும் எம்.ஆர்.எம். அசாமும் ஆவோம். எனினும் இன்று இங்கு இடம்பெறும் நிர்வாக சபைக் கூட்டத்திற்கு எமக்கு அழைப்பு விடுக்கப்படவும் இல்லை. வருகை தந்த போதும் மதுஅருந்திய சிலர் எம்மைத் தாக்குகின்றனர். முன்னாள் அமைச்சர் அதாவுத செனெவிரத்ன இங்கு அழைத்திருப்பது மாவனல்லை பிரதேசத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களையே. ஒற்றுமையை பிரதிநிதித்துவப்பட வேண்டிய நாம் இன்று அமைதியாக இருக்கின்றோம். எனினும் எதிர்வரும் புதன்கிழமை கட்சியின் செயலாளரை சந்தித்து இது தொடர்பில் தெரிவிப்போம்.” என்றார்.