கஜேந்திரகுமாருடன் கூட்டுச்சேரும் விக்னேஸ்வரன்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டு சேர்வதா? இல்லையா? என்பது குறித்து சிந்திப்பேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாகாண சபை தேர்தலில் தம்முடன் கூட்டு சேர்ந்து போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் நேற்று முதலமைச்சரிடம் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“வட மாகாண சபைத் தேர்தலில் யாருடன் கூட்டுச் சேருவது என்று, தேர்தல் அறிவிக்கப்படும் போதே தீர்மானிக்கப்படும். கூட்டு சேருமாறு தனக்கு பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

எனினும், இது குறித்து அந்த நேரத்திலேயே சிந்தித்து முடிவெடுக்க முடியும். மாகாண சபை தேர்தலை எப்போது நடத்துவது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில், அதற்கு இன்னும் ஆறு, ஏழு மாதங்கள் கால தாமதம் ஏற்படலாம். ஆகையினால், இது குறித்து சிந்திக்க இன்னும் நீண்ட காலம் இருக்கின்றது.

எனவே, தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டு சேர்வதா? இல்லையா? என்பது குறித்து தான் சிந்திப்பேன் என” வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்ச்சியாக, இரகசியமாக சந்தித்து பேசிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.