மாந்தீரிக கலை என்பது கத்தியை போன்றது. கத்தி மருத்துவர் கையில் இருக்கும் போது உயிரை காக்கும். அதே கத்தி ஒரு முரடனிடம் இருந்தால் உயிரை எடுக்கும். இந்த முரடனை போன்ற மனநிலை கொண்ட பலர் பிறர் மீது ஏற்படும் பொறாமை மற்றும் கோபம் காரணமாக சில தீய மாந்திரீகர்களை கொண்டு பிறருக்கு ஏவல், பில்லி, சூனியம் செய்வினை, துஷ்ட ஆவிகள் போன்றவற்றின் மூலம் தீமை விளைவிக்க முயல்கின்றனர். நமக்கு யாரேனும் இத்தகைய தீமையான காரியத்தை செய்திருந்தால் அதிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
எதையும் அழிக்கும் வல்லமை பெற்றது நெருப்பு. அந்த நெருப்பின் முழு உருவமாக இருக்கும் சூரிய பகவானை தினமும் நமஸ்கரிப்பவர்களை எப்படிப்பட்ட துஷ்ட சக்திகளும் தீய மாந்திரீக ஏவல்களும் எதுவும் செய்ய முடியாது. செய்வினை ஏவல் பாதிப்புகள் இருப்பதாக உணருபவர்கள் வருடத்தில் வருகிற தை, அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற தினங்களில் கடலை ஒட்டி இருக்கும் கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற கோவில்களின் கடலில் நீராடி, அந்த கோவில்களில் இருக்கும் இறைவனை வணங்க வேண்டும்.
அந்த கடல் நீரை ஒரு மிகப்பெரிய புட்டியில் பிடித்து வந்து, உங்கள் வீட்டின் பூஜையறையில் வைத்து வணங்கி, பின்பு உங்கள் வீட்டை சுற்றிலும் அந்நீரின் சில துளிகளை தெளிக்க மாந்திரீக கட்டு ஏதேனும் இருந்தால் அது உடையும்.
வசிய மருந்து ஏதேனும் உங்களுக்கு கொடுக்கப்பட்டதாக உணர்ந்தால் ஒரு மண்டலம் முழுதும் தினந்தோறும் உங்கள் உணவில் முருங்கை அல்லது அகத்திக்கீரை சேர்த்து உண்ண உங்களின் உடலில் தங்கியிருக்கும் எப்படிப்பட்ட வசிய மருந்தின் சக்தியும் முறியும். பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ மூர்த்திக்கு பூசணிக்காயை இரண்டாக வெட்டி, விளக்கெண்ணெய் அல்லது பஞ்சதீப எண்ணையை ஊற்றி, திரி போட்டு தீபமேற்றி வழிபட்டு வந்தால் எப்படிப்பட்ட செய்வினை கோளாறுகளும் நீங்கும்.
துஷ்ட சக்திகளால் பாதிப்பு ஏற்படுமோ என பயப்படுபவர்கள் மதுரை கள்ளழகர் கோவிலில் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு சாற்றப்பட்ட காய்ந்த சந்தனத்தை சிறிது எடுத்துக்கொண்டு வந்து, வீட்டின் பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க செல்பவர்கள் அங்கு நெருப்பில் இட்டு கொளுத்தப்படும் தேங்காயை சிறிது எடுத்து கொண்டு வந்து உங்கள் பூஜையறையில் வைத்து கொள்ள உங்களை எத்தகைய துஷ்ட சக்திகளும் அண்டாது.
உங்களால் இவ்விடங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும், உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இந்த இடங்களுக்கு செல்லும்போது இவற்றை கொண்டுவர சொல்லி பெற்றுக்கொள்ளலாம்.