11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது

கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெற்றியாராச்சி முதியான்சலாகே சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி என்ற முழுப் பெயரைக் கொண்ட நேவி சம்பத்,  கொழும்பு லோட்டஸ் வீதியில் போலி அடையாள அட்டையுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

2008-09 காலப்பகுதியில் கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேவி சம்பத் தேடப்பட்டு வந்தார்.

வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 41 வயதுடைய இவர் சிறிலங்கா கடற்படையில் லெப். கொமாண்டர தர அதிகாரியாக பணியாற்றியவர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இவரைக் கைது செய்வதற்கு உதவுமாறு சிறிலங்கா காவல்துறையினர் நேவி சம்பத்தின் படத்தை பலமுறை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது