வீடு கட்ட கடன் வாங்கிய பெற்றோர்! யாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்

பெற்றோர் பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலையில், 11 வயதான மகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி மாலை நேர வகுப்பிற்கு சென்ற போதே பெற்றோருக்கு கடன் கொடுத்தவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் பெற்றோர் வீடு கட்டுவதற்காக 2015ம் ஆண்டு குடத்தனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் நான்கு லட்சம் ரூபா கடனாக பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த கடனுக்காக கடந்த ஆண்டு வரையில், 3 லட்சத்துக்கும் மேல் வட்டியாக செலுத்தியுள்ள நிலையில், கடந்த ஒர் ஆண்டாக வட்டி செலுத்த முடியாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த கடன் தொகையினை முழுமையாக செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், இன்று சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.