திருவாரூரை ஆண்ட அரசன் சிபி சக்கரவர்த்தி மன்னனாக இருந்த காலத்தில் ஒரு புறா தன்னை வேட்டையாட வந்த பருந்திடமிருந்து தப்பி சிபி சக்கரவர்த்தியிடம் வந்து தஞ்சம் புகுந்தது. புறாவைக் காப்பாற்றிய மன்னன் புறாவை வேட்டையாட வந்த பருந்துக்குத் தன்னையே உணவாக அர்ப்பணித்த வரலாறு திருவாரூருக்கு உண்டு.
அதைப்போல இன்று ஒரு புறாவுக்காக தன்னுடைய லாரியை வழங்கியுள்ளார் திருவாரூரைச் சேர்ந்த சிங்காரவேலு. திருவாரூர் அருகே சேந்தமங்கலம் காவேரி நகரைச் சேர்ந்தவர் சிங்காரவேலு.
இவர் தனது கல்லூரிப் படிப்பை முடித்ததிலிருந்து 15 வருடங்களாக லாரி டிரான்ஸ்போர்ட் பிசினஸ் செய்து வருகிறார். இவர் 10க்கும் மேற்பட்ட லாரிகள் வைத்துள்ளார்.
இவை மணல் ஜல்லி ஏற்றிச்செல்லும் நாள்கள் தவிர மற்ற நாள்களில் வீட்டுக்கு அருகே உள்ள ஜல்லி சேமிப்புக் கிடங்கில்தான் நிறுத்தி வைத்திருப்பார்.
அப்படி நிறுத்தி வைத்திருந்த போதுதான் ஒரு புறா லாரியின் டீசல் டேங்க் அருகில் கூடு கட்டியுள்ளது. அதைக் கண்ட சிங்காரவேலு லாரியின் ஓட்டுநரை அழைத்து “இந்தப் புறா குஞ்சுப் பொரித்து அவை பறந்து செல்லும் வரை இந்த லாரியை எடுக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு சமுக வலைதளங்களில் பரவி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுபற்றி லாரியின் ஓனர் சிங்காரவேலுவிடம் பேசினோம். “நான் 15 வருடமா இந்த டிரான்ஸ்போர்ட் துறையில் இருக்கேன். மணல்,ஜல்லி போன்ற பொருள்கள் ஏற்றிச் செல்வதற்கான லாரிகள்தாம் எல்லாமே. ஆனா இப்போ மணல் லோடுக்கு லாரிகள் போகணும்னா ஆன்லைன் சுழற்சி முறையில்தான் போகமுடியும்.
அதற்கான நாள்கள் கொடுக்கப்படும் வரை லாரி ஜல்லி சேமிப்புக் கிடங்கில்தான் நிற்கும். அதுபோலத்தான் சென்ற மாதம் நிறுத்தியிருந்த லாரில டீசல் இருக்கானு பார்க்கப் போனேன்.
அப்போதுதான் டேங்க் மேல இருந்த புறாகூட பார்த்தேன். உடனே டிரைவரை கூப்பிட்டு இந்தப் புறா முட்டைகள் பொரித்து அது பறக்குறவரைக்கும் இந்த வண்டியை எடுக்காதீங்கனு சொல்லிட்டுப் போயிட்டேன்.
நாம வீடு கட்டுறது போலதான புறாக்கள், குருவிகள் எல்லாம் கூடு கட்டுது. நாம வீடு கட்டுனா எப்படி தினமும் வந்து பாப்போமோ அதுபோல தினமும் காலைலயும், சாயங்காலமும் வந்து பார்த்துட்டுப் போவேன்.
எனக்கும் இரண்டு பசங்க இருக்காங்க. அவங்க வளந்து நல்லபடியா இருக்கணும்னு ஆசைப்படுறது போல இந்தப் புறாக்குஞ்சுகளும் நல்லபடியா பறந்து செல்லணும்ன்னு தோணுச்சி.
நான் விட்டுலயே குருவிகளுக்கான கூடுலாம் வெச்சிருக்கேன். அதுல எந்தக் குருவியும் கூடு கட்டல. ஆனா என்னவோ என்னோட லாரியில புறா கூடு கட்டிருக்கு. புறா கூடு கட்டி ஒரு மாதம் ஆகப்போது.
இந்த ஒரு மாத காலத்துல ஆன்லைன் புக்கிங் நிறைய வந்துச்சி. ஆனா புறாவா வருமானமானு பாத்தப்ப எனக்குப் புறாவோட கூடுதான் முக்கியமா தெரிஞ்சிச்சு.
ஒரு மாசமா இந்த லாரி ஓடல. இதனால் 50 ஆயிரம் வரை வருமானம் போச்சு. இந்தப் பணத்தை எப்போ வேணும்னாலும் சம்பாதிச்சிடலாம்.
ஆனா ஒரு கூட்ட கலைச்சிதான் சம்பாதிக்கணும்னா அது வேண்டாம்னு தோணுச்சு. இன்னும் ஒரு சில நாள்கள்ல புறா குஞ்சுகள் பறந்துடும். அதுக்கு அப்பறமாக சம்பாதிச்சிக்கலாம்” எனப் பரந்த மனதோடு கூறி முடித்தார்.
காசு பணம் என்று மனிதர்கள் ஓடும் காலத்தில் இந்த மனிதநேயம் மிக்க சிங்காரவேலுவுக்க்கு மக்கள் பாராட்டு குவியட்டும்.