வடக்கு, கிழக்கில் முகாம்களைச் சுருக்குவோமே தவிர அகற்றமாட்டோம் – இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் மூடப்படாது என்றும், எனினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் சுருக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

”வடக்கு, கிழக்கில் மேலும 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க நாம் தயாராக இருக்கிறோம்.

இந்தக் காணிகளை விடுவிக்க முன்னர், எமது உட்கட்டமைப்பு வசதிகளை நகர்த்த வேண்டியுள்ளது. தற்போது கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

இதற்காக 800 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். ஏற்கனவே 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய தொகையை இன்றைக்கு வழங்கினால் கூட, ஒரே இரவில் முகாம்களை அகற்றி விட முடியாது. எமது படையினரை இடம்மாற்றுவதற்கான அடிப்படை வசதிகளை செய்வதற்கு 5 மாதங்களாவது தேவைப்படும்.

எனவே, ஆறு மாதங்களுக்குள் நிதியை வழங்கினால், எமது கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, நாங்கள் வேறு இடத்துக்கு நகர முடியும்.

2018 ஜூலை 31 வரை, சிறிலங்கா இராணுவம், வடக்கு கிழக்கில் 65,133 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது, தற்போது, இராணுவத்திடம் 19,300 ஏக்கர் காணிகள் உள்ளன.

இதில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும், 16,115 ஏக்கர் காணிகளையும், கிழக்கில், மூன்று மாவட்டங்களில், 3,185 ஏக்கர் காணிகளையும் இராணுவம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் காணிகளில் 2,621  ஏக்கர் மாத்திரமே, தனியார் காணிகள். ஏனைய 16,680 ஏக்கர் காணிகளும் அரச காணிகள்.

2009ஆம் ஆண்டில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில், 84,434 ஏக்கர் காணிகள் இருந்தன. ஏனைய காணிகள் படிப்படியாக பல்வேறு கட்டங்களில் விடுவிக்கப்பட்டு விட்டன.

பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

காணிகள் விடுவிக்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. எமது படையினர் அங்கு தொடர்ந்து நிலைகொண்டிருப்பார்கள். ஆனால், அடிப்படையில் எமது படையணிகள் சுருக்கப்பட்டிருக்கும்.

வடக்கில் அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

புள்ளிவிபரங்கள் மற்றும் முகாம்களில் எண்ணிக்கையை வைத்து சிலர் அவ்வாறு உணரலாம்.

ஆனால், முழுத் தீவையும் எடுத்துக் கொண்டால், தெற்கு, மேற்கு, மற்றும் மத்திய மற்றும் ஏனைய மாகாணங்களில்  குறைந்தளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கில் அதிகளவு படையிர் ஏன் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றால், அங்கு தான் பிரச்சினை உள்ளது. போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் தான் ஆகிறது.

சிறிலங்கா காவல்துறை இந்தப் பிரதேசங்களின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றுக் கொள்ளும் காலம் வருவதை நான் விரும்புகிறேன்.

அவர்கள் தமது துணை இராணுவப் படைகளை வைத்திருக்க முடியும். அப்போது நாங்கள் எமது படையினரை முகாம்களுக்குள் முடக்க முடியும்.

நான் காவல்துறையை குற்றம்சாட்டவில்லை. அவர்களுக்கு ஆளணி மற்றும் வளங்கள் தொடர்பான வரையறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன.

ஏனையவற்றை விட இராணுவம் எல்லா இடங்களிலும் அதிகளவு ஆளணியையும் வளங்களையும் கொண்டிருக்கிறது.

எனவே, நாம் எமது படையினரைக் குறைக்கவோ, முகாம்களை மூடவோ மாட்டோம். ஆனால் முகாம்களைச் சுருக்குவோம்.

காணிகளை விடுவித்து முகாம்களைச் சுருக்கினாலும், பாதுகாப்பை அதேநிலையில் தொடர்ந்தும் பேணுவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.