ராஜ ராஜ சோழன் காலத்து உணவே அவர்களின் போர் வெற்றிகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்ததாம்.*
“உணவே மருந்து” என்பதே பண்டைய கால தமிழர்களின் தாரக மந்திரமாக இருந்தது. அவர்களின் உணவு முறையே அவர்களுக்கு மிக பெரிய பலமாக இருந்ததென்றால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்கள் உண்ட உணவுகள் அனைத்துமே முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் உற்பத்தி செய்யப்பட்டு, மனித உழைப்பால் விதைத்து அறுவடை செய்யப்பட்டது. அதனாலேயே அதில் உள்ள முழு சத்தும் இயல்பாகவே உடலின் வலிமைக்கு மிகவும் உதவியது. பண்டைய காலத்து தமிழ் மக்கள் சைவம் அசைவம் என பாகுபாடு பார்க்காமல் எல்லா வகையான உணவுகளையும் உண்ணும் பழக்கத்தை வைத்திருந்தனர்.
“மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே” என்ற கூற்றுப்படி சங்க காலத்து மன்னர்கள் சாப்பிட்ட உணவுகளையே மக்களும் உண்டு மகிழ்ந்தனர். சில சங்க காலத்து நூல்களில் உணவு முறைகளை பற்றி குறிப்பிட்டுள்ளனர். அதில் பல போர் வெற்றிக்கு அவர்களின் உணவு முறையும் ஒரு மிக பெரிய பங்காக இருந்ததென்று எழுதி உள்ளனர். இத்தகைய பழம்பெரும் வரலாற்றை கொண்ட நம் தமிழ் மன்னர்களும் மக்களும் எந்த வகையான உணவுகளையெல்லாம் உண்டார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
*உணவு முறை
சங்க காலத்து மக்களின் ஆரோக்கியத்தை மிக சுலபமாக கணித்து விடலாம். ஒருவர் அடிக்கடி நோய்வாய் படுகின்றார் என்றால் அவரது உணவு முறையில் ஏதோ தவறு இருக்கிறது என்றே மருத்துவர்களும் கூறுவர்களாம்.
அத்தகைய அளவிற்கு உணவின் தாக்கம் சங்க காலத்து மக்களிடம் பரவி இருந்தது. ஒரு பழமொழி கூறுவார்கள்… “காலையில் ஒரு அரசனை போலவும், மதியம் ஒரு இளவரசனை போலவும், இரவு பிச்சைக்காரர் போலவும் உண்ண வேண்டும்” என்பதே. இதை போலத்தான் உணவு முறையையும் அமைத்து கொண்டார்கள்.
*அரிசியே முதன்மை உணவு
“நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!”
-ஐங்குறுநூறு
இன்று நாம் பயன்படுத்தும் “வெள்ளை அரிசியை” சங்க காலத்து மக்கள் பயன்படுத்தவே இல்லையாம்.
இந்த வெள்ளை அரிசியில் உமி, தவிடு ஆகியவற்றை முற்றிலுமாக நீக்கி விடுகின்றனர். ஆனால் சங்க காலத்தில் இவற்றையெல்லாம் நீக்கப்படாத “சிவப்பு அரிசியே” பயன்படுத்தினர். இதனை “முழு அரிசி” எனவும் “தீட்டப்படாத அரிசி” எனவும் கூறுவார்கள். அவர்களின் உணவில் அரிசியும் முக்கிய உணவாக இருந்தது.
*சிவப்பு அரிசியில் உள்ள சத்துக்கள்
நாம் இன்று உண்ணும் வெள்ளை அரிசி கிட்டத்தட்ட சக்கைக்கு சமமானதே. வெறும் சக்கையில் இருந்து நம் உடலுக்கு எந்த வித சத்தும் கிடைக்காது. ஆனால் அன்று அவர்கள் பயன்படுத்திய “சிவப்பு அரிசியில்” எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பல மடங்கு இது உடல் வலிமையை அதிகரிக்க செய்கிறது. எந்தவித ரசாயனமும் இதில் கலக்காததால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. மேலும் இந்த வகை அரிசி விரைவில் ஜீரணம் ஆகிவிடும்.
*காலை,மதியம், மாலை உணவுகள்
பொதுவாக அந்த காலத்து தமிழ் மக்கள் சீரான உணவு பழக்கத்தையே பின்பற்றினர். மக்களின் உணவிற்கேற்ப அவர்களின் உழைப்பும் சமமாக இருக்கும். காலை வேளையில் கம்பங்கூழ், வரகரிசி சோறு, காய்கறிகளை கொண்ட துவையல் ஆகியவையே உணவாக சாப்பிட்டார்கள். மதிய வேளையில் அதிக புரத சத்துக்கள் நிறைந்த இறைச்சிகளை உண்டார்கள். மேலும் இரவில் கம்பு தோசை, கேழ்வரகு அடை, கேழ் வரகு இட்லி போன்றவையே உணவாக இருந்தது. மேலும் தினமும் அவர்களின் உணவில் முக்கனிகளான “மா, பலா, வாழை” இடம் பெற்றிருந்தது.
*அறுசுவை உணவு
சங்க காலத்து தமிழர்களின் உணவில் அறுசுவைகளான துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறும் இடம் பெற்றிருக்கும். ஒரு மனிதனின் உடலுக்கு இந்த ஆறு சுவைகளும் மிகவும் இன்றியமையாததாகும். இவற்றில் ஒன்றின் அளவு குறைந்தால் கூட உடலுக்கு பிணியை தரும். சங்க காலத்து மக்கள் மிகவும் வலிமையாக இருந்தமைக்கு அறுசுவை உணவே முக்கிய காரணம். ஒவ்வொரு மக்களின் இருப்பிடத்தை பொருத்தும் உணவின் சாரம் மாறியது.
*அருந்தானிய உணவுகள்
இன்று நாம் வழக்கு மொழியாக பயன்படுத்துகின்ற “சிறுதானியம்”தான் அன்று “அருந்தானியம்” என்று வழங்கப்பட்டது. மக்களின் அன்றாட உணவு பழக்கத்தில் சிறுதானிய உணவே அதிகம் பயன்படுத்தப்பட்டது. கம்பு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம் ஆகியவையே முதன்மை உணவு பட்டியலாக இருந்ததாம். போருக்கு செல்லும் வீரர்களும் இந்த சிறுதானிய உணவுகளையே உண்பார்களாம். பல அயல்நாட்டு போர் வீரர்களை தோற்கடிக்க நம் பாரம்பரிய உணவு பழக்கமும் முக்கிய பங்காக இருந்ததென்று சங்க காலத்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
*ஐந்திணை உணவுகள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகள். இதில் வாழ்ந்த மக்கள் அந்த இடத்தின் தன்மைக்கேற்ப உணவு முறைகளை பின்பற்றி வந்தனர். குறிஞ்சியில் உள்ள மக்கள் தேன், திணை போன்ற உணவுகளை உண்டனர். முல்லை மக்கள் இறைச்சி, பச்சை காய்கறிகள் போன்றவற்றையே உணவாக பயன்படுத்தினர். மருத நில மக்கள் அரிசி, கேழ்வரகு, திணை, கம்பு, சோளம் போன்றவற்றை உண்டு களித்தனர். நெய்தலில் உள்ள மக்கள் அதிக கடல் உணவுகளையே சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தனர், பாலை நிலத்தினர் இறைச்சி, மீன், போன்றவற்றையே பிரதான உணவாக உண்டார்கள்.
*ஆனால் இன்று.?*
பல போரின் வெற்றிக்கே அவர்களின் உணவு எத்தகைய முக்கிய இடத்தில் இருந்தது என்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்றே. ஆனால் இன்றோ நம் உணவின் தன்மையும், உணவு முறையின் சாரமும் முற்றிலும் திரிந்து எண்ணற்ற சீர்கேடுகளை உடலுக்கு தருகிறது.
இத்தகைய பழம்பெரும் வரலாற்றை கொண்ட நம் தமிழரின் உணவு முறையை இன்று நாம் பின்பற்ற தவறியதாலே சிறுவயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகி உயிரையே இழந்து விடுகின்றோம். இனியாவது உணவுகளை இயற்கை தன்மையோடு உற்பத்தி செய்து, உடல் நலத்தை காப்போம்.