“நீயும் பொம்மை, நானும் பொம்மை, நெனச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை.. என்நு ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ் சினிமா பாடல்தான், பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ‘பொம்மலாட்டம்’ டாஸ்க்கை பார்க்கும் போது அடிக்கடி நினைவிற்கு வருகிறது. பிக்பாஸ் ஆட்டுவிக்கிற படியான பொம்மைகளாக போட்டியாளர்கள் மாறிக் கொண்டிருக்க, வேடிக்கை பார்க்கிற பொம்மைகளாக நாம் இருக்கிறோம். கார்ப்பரேட் விதிகளின் படி பிக்பாஸ்ஸூம் ஒருவகை பொம்மைதான்.
நேற்றைய நிகழ்ச்சியின் அப்பட்டமான நகல் என்று இன்றைய நாளைச் சொல்லி விடலாம். புதிதாக ஒன்றுமில்லை. ‘காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு தரும் நல்ல பாட்டு” என்று பாரதி எழுதிய டைம்டேபிள் மாதிரி, பிக்பாஸ் வீட்டின் டைம்டேபிள் இதுதான். காலையில் பாட்டு, பின்பு பொம்மையின் மூலப்பொருட்களை கைப்பற்றுவதற்கான குஸ்தி, அரைகுறையுமாக பொம்மைகளை உருவாக்குதல், அது சார்ந்த பஞ்சாயத்து, முன்னர் நடந்த பஞ்சாயத்துக்களுக்கான வம்பும் சண்டையும்… என்று போய்க் கொண்டிருக்கிறது.
நமக்கும் தெரியாமல் மஹத்திற்கு ஏதேனும் ரகசிய டாஸ்க் தரப்பட்டிருக்கிறதோ என்று கருதும்படி அவர் மிகையான ஆவேசத்துடன் இருக்கிறார். வழிப்பறிக் கொள்ளையனாகவும் ஜேப்படி திருடனாகவும் பல அவதாரங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். அராஜகத்தில் ஈடுபடும் போதெல்லாம் மஹத்தை மும்தாஜ் கட்டுப்படுத்த முயல்வது நல்ல விஷயம்தான். ஆனால் மூலப் பொருட்களை கைப்பற்றுவதில் ஆக்ரோஷமாக ஈடுபட்டு சர்ச்சையை உருவாக்கும் மஹத்தை அமர வைத்து விட்டு வேறு எவரையேனும் உபயோகப்படுத்தலாம் என்று ஏன் மும்தாஜிற்கு தோன்றவில்லை? மஹத்தை கண்டிப்பது போல் பாவ்லா செய்து விட்டு பொருட்களையும் கைப்பற்றலாம் என்கிற ஐடியாவா என்று தெரியவில்லை. மஹத்தை விட்டால் வேறு திறமையான பலசாலியும் அவரின் டீமில் இல்லை என்பதும் யதார்த்தம்தான். பெண்ணாக இருந்தாலும் கூட மஹத்தின் அராஜகத்திற்கு ஐஸ்வர்யா முடிந்த வகையில் ஈடுகொடுப்பது ஒருவகையில் சிறப்பு.
குழந்தைகள் ஆசையாக விளையாடும் பொம்மைகளை வைத்துக் கொண்டு பெரியவர்கள் இப்படி ரணகளமாக விளையாடுவது ஒருவகையில் அபத்தமான முரண்.
**
58-ம் நாளின் சம்பவங்கள் இரவைத் தாண்டியும் தொடர்கின்றன. தங்களின் பணத்தையும் மூலப் பொருட்களையும் பாதுகாப்பதற்காக இரண்டு அணிகளும் வீட்டில் வாசலில் அகதிகள் மாதிரி படுத்துக் கிடந்தார்கள். “அவங்க கிட்ட இருந்து எதையாவது சுட்டாத்தான் நான் ஜெயிக்க முடியும். ‘ஆம்பளைத் தடியங்களா.’ எதையாவது யோசியுங்க.. பேசாம.. பணத்திற்கு பதிலாக பெட்டியையே தூக்கிடலாமா?” என்று டெடராக ஐடியா தந்து கொண்டிருந்தார் ரித்விகா. பாலாஜி அணி பிளான் எல்லாம் நல்லாத்தான் போடுகிறார்கள். ஆனால் சரியான சமயத்தில் இவர்கள் தூங்கி விட, எதிரணி இவர்கள் திட்டமிட்டதை செய்து விடுகிறது.
ஸ்மோக்கிங் ரூமின் உள்ளே நடக்கும் காட்சிகளை காட்ட முடியாத ‘கலாசார’ கட்டுப்பாட்டினால் வாட்ச்மேன் மாதிரி அந்த அறையின் வெளிப்புற காட்சிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தது காமிரா. மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்த உரையாடல் கேட்டது. எதிரணிக்காக துரோகம் செய்யவும் தயாராக இருந்தார் மஹத். ‘நான் இருந்த அணி இது வரை தோத்ததே இல்லை’ என்று யாஷிகா சொல்லிக் கொண்டிருக்க, பிக்பாஸ் கிட்ட இருந்து திருடியாவது உன்னை ஜெயிக்க வைச்சுடுவேன்’ என்பது மாதிரி ஃபீலிங் தந்து கொண்டிருந்தார் மஹத். காதல் படுத்தும் பாடு.
நள்ளிரவிற்கு மேலே திடீரென்று சைரன் ஒலி எழும்ப, மக்கள் பதறியடித்துக் கொண்டு எழுந்து ஓடி வந்தார்கள். மக்களை இப்படி கொடுமைப்படுத்தும் பிக்பாஸ், பார்ட்டைம் ஜாப் ஆக ‘ஜெயில் வார்டனாக’ இருக்கிறாரோ, என்னவோ. மூலப் பொருட்களை கைப்பற்ற வழக்கம் போல் மஹத்திற்கும் ஐஸ்வர்யாவிற்கும் குஸ்தி நடந்தது. ‘சிவப்பு நிறக் கோட்டின் பின்னால் நின்றுதான் பொருட்களை எடுக்க வேண்டும்’ என்று பிக்பாஸ் திரும்பத் திரும்ப எச்சரித்தாலும் அவர்களால் அதைப் பின்பற்ற முடியவில்லை. இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மஹத் பொருட்களை கைப்பற்றுவதால் ஐஸ்வர்யா முன்னேற வேண்டியிருக்கிறது. எனவே மஹத் இன்னமும் முன்னே செல்ல வேண்டியிருக்கிறது. கன்வேயர் பெல்ட்டின் உள்ளேயே அவர்கள் தலையை நுழைத்து விடுவார்களோ என்று கூட பயமாக இருந்தது. பாவம் ஐஸ்வர்யா, சின்னப்பெண் எவ்வளவுதான் போராட முடியும்?
மஹத்துடன் நிகழ்ந்த மோதலைத் தொடர்ந்து தான் செல்லாமல் ஐஸ்வர்யாவை முன்நிறுத்துவது டேனியின் நல்ல உத்தி. இதன் மூலம் கைகலப்பு நிகழாமல் இருக்கும். யாஷிகா, ஐஸ்வர்யா என்றால் மஹத் சற்று மென்போக்கை கடைப்பிடிக்கலாம்.
விடியற்காலை 05:00 மணி. பாலாஜி அணி மொத்தமும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்க, விஷபாட்டில் மஹத்திடம் மெல்ல குரல் தந்து எழுப்பியது. அவரும் அதற்கு தயாராகத்தான் இருந்தார். ஒரு அசல் ஜேப்படி திருடனின் உடல்மொழியுடன் பூனை போல் வந்து எதிரணியை நோட்டம் பார்த்தார் மஹத். பின்பு தொழில் திறமையுடன் ஷூவை கழற்றி விட்டு வந்து மெல்ல நடந்து வந்து எதிரணி வைத்திருந்த மூலப்பொருட்கள் அடங்கிய கூடையை தூக்கி வந்தார். மஹத்தை எழுப்பி விட்ட ஜனனி ‘நாளைக்கு கேஸூ, வழக்கு –ன்னு வந்தா எனக்கொண்ணும் தெரியாது” என்பது போல் பாவமாக திரும்பி அமர்ந்திருந்தார்.
மஹத் தூக்கிச் சென்றதை கடைசி விநாடியில் பார்த்த ரித்விகா, ஏய்.. என்று துரத்திச் செல்வதற்குள் பொருட்களை தங்கள் இடத்தில் சேர்த்து விட்டார் மஹத். பிறகு முழித்துக் கொண்ட பாலாஜி அணியில் இருந்த யாஷிகா, ‘இந்த தட்ல சாப்பிட்டு அந்த தட்ல ஓட்டை போடுறியா நீ?” என்று மஹத்தை கேட்டுக் கொண்டிருந்தார். என்ன அர்த்தமோ? ‘சூப்பர்வைசர் கேட்டா என்ற சொல்றது” என்று ரித்விகா சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக இருந்தார் டேனி. (பயப்படறியா தல?!).
‘நாளைக்கு யாரையும் தூங்க விடப் போறதில்ல. தண்ணி எடுத்து ஊத்திடப் போறேன்’ என்று எதிரணியிடம் ஒழுங்கு காட்டிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. தைக்க உதவும் கருவிகளையும் எடுத்துச் சென்ற மஹத், ‘ரூ.200 கொடுங்க.. தந்துடறேன்’ என்றார். பாலாஜி அணியிடம் இருப்பதே அவ்வளவுதான். ‘போடா.. தர முடியாது” என்றனர்.
59-ம் நாள் காலை. எட்டுமணி. ‘வெற்றிக்கொடி கட்டு…’ என்கிற உத்வேகப்பாடலை ‘படையப்பா’ படத்திலிருந்து போட்டனர். உள்ளேயிருந்து எழுந்த வந்த சூப்பர்வைசர் பாலாஜியிடம் காலி கூடையைக் காட்டி அதற்கு முன்பு நடனமாடினார் ரித்விகா. பாலாஜிக்குப் புரிந்து விட்டது. ‘யார்ரா இந்தப் பாடலைப் போட்டது’ என்று ஜாலியாக டென்ஷன் ஆனார்.
பொம்மை செய்வதற்கான ஒலி காலையிலேயே ஒலித்தது. மும்தாஜ் அணி பொம்மை தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட, கோட்டை விட்ட பாலாஜி அணி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. “எதிரணி செய்யும் பொம்மை எல்லாவற்றையும் ஏதாவது காரணம் சொலலி ரிஜக்ட் பண்ணிடுங்க” என்று டெடராக ஐடியா தந்து கொண்டிருந்தனர், டேனியும் ரித்விகாவும்.
“சமையல் வேலையைப் பார்க்கலையா?” என்று டேனியிடம் கேட்டார் எதிரணியில் இருந்த மும்தாஜ். திருட்டுக் கொடுத்த வெறுப்பில் இருக்கும் டேனி ‘சென்றாயன்.. சும்மாதானே இருக்கான். அவனைச் செய்யச் சொல்லுங்க’. “இல்ல.. இவனுக்கு கைல அடிபட்டிருக்கு. கைய வெட்டிக்கம்மா’ என்று பாலாஜி ஐடியா தர, ‘கை வெட்டிக் கொண்டது’ போல பாவனையை ஜாலியாக செய்தார் டேனி.
மும்தாஜ் அணி செய்த பொம்மைகளை சோதனை செய்யும் நேரம் வந்தது. உண்மையிலேயே அது மும்தாஜிற்கான சோதனைதான். பொம்மைக்கானது அல்ல. தங்கள் அணி சொல்லித்தந்தபடி ஒவ்வொரு பொம்மையையும் நிராகரிப்பதற்காக சொத்தையான காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தார் பாலாஜி. ‘இங்க பாருங்க மேடம். மூக்கு இருக்க வேண்டிய இடத்துல கண்ணு இருக்கு” என்று பாலாஜி கூற, ஒரு கட்டத்தில் ‘உங்க இஷ்டம்’ என்று போராடித் தளர்ந்தார் மும்தாஜ். இறுதியில் 2 பொம்மைகள் மட்டுமே தேர்வாகின. ரூ.40 வீதம் இரண்டு பொமமைகளுக்கு எண்பது ரூ கூலி தந்தார் பிக்பாஸ்.
பாலாஜியைத் தவிர்த்து, அந்த அணியிலிருந்து மற்றவர்களை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ், ‘உங்கள் அணி மிகவும் பின்தங்கி இருப்பதால் அணியின் சூப்பர்வைசரை மாற்ற வேண்டும்’ என்று கட்டளை பிறப்பித்தார். கூடி ஆலோசித்து ‘யாஷிகா’வை தேர்ந்தெடுத்தனர். அவரால்தான் மஹத்தை சமாளிக்க முடியும் என்பது டேனியின் கணக்கு. ‘தைக்கும் கருவிகளையும் எதிரணியினர் சுட்டு விட்டனர். அஜாக்கிரதையாக இருந்தது எங்கள் தவறுதான். மன்னித்து விடுங்கள். அந்தப் பொருட்களை தந்தால்தான் எங்களின் டாஸ்க்கை தொடர முடியும்” என்று டேனி வைத்த வேண்டுகோளை, ஆச்சரியமாக ஏற்றுக் கொண்டார் பிக்பாஸ். (கல்லுக்குள் ஈரம்).
அணியின் கண்காணிப்பாளராக யாஷிகா மாற்றப்பட்ட செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும் வெளியே இருந்த பாலாஜியின் முகத்தில் இருள் படர்ந்தது. ‘ஏன்.. நல்லாத்தானே போயிட்டு இருந்தது..’ என்கிற மாதிரி விழித்துப் பார்த்தார் மும்தாஜ். டேனி மற்றும் யாஷிகாவிடம் இருக்கும் போர்க்குணம் பாலாஜியிடம் இல்லை. தங்கள் அணி தூங்காதவாறு அவர் பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். வீட்டின் உள்ளே சொகுசாக சென்று தூங்கியதற்கான தண்டனை.
மதிய நேரத்தில் மூலப்பொருட்கள் வருவதற்கான சைரன் அடித்தது. பாய்ந்து ஓடி வந்தார் மஹத். மறுபடியும் தள்ளுமுள்ளு. ஆணாகிய மஹத்தின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தார் ஐஸ்வர்யா. சிவப்பு நிற கோட்டைத் தாண்டிச் சென்றதால் கன்வேயரை நிறுத்தினார் பிக்பாஸ். மும்தாஜூம் யாஷிகாவும் இணைந்து அரண் அமைத்து, ‘இனி விதியை மீற மாட்டோம்’ என்று உறுதியளிக்க மறுபடியும் கன்வேயர் பெல்ட் நகர்ந்தது. என்றாலும், அவர்களின் பாதுகாப்பையும் மீறி மஹத்தும் ஐஸ்வர்யாவும தாண்டிச் சென்று பொருட்களை பிடுங்கினார்கள். மும்தாஜின் எச்சரிக்கையை மஹத் கேட்பதாக இல்லை. சில நிமிடங்களில் ஆளே இல்லாத நேரத்தில் பொருட்கள் வர ஆரம்பிக்க, மின்னல் வேகத்தில் வந்த ஐஸ்வர்யா சிலவற்றைக் கைப்பற்றினார். இதற்குள் மஹத்தும் வந்து விட மறுபடியும் தள்ளுமுள்ளு ஆரம்பித்தது. “ஏன் என் கையைப் பிடிச்சு இழுக்கற?” என்று ஆங்கிலத்தில் சண்டை போட்ட ஐஸ்வர்யா, அது மஹத் என்பதால் அதிகம் இழுக்காமல், ‘சரி ஒழிஞ்சு போ.. என்று கிளம்பினார்.
பொருட்கள் சற்று சேர்ந்ததால் பாலாஜி அணியும்…. மன்னிக்க.. யாஷிகா அணியும் இப்போது பொம்மைகளை உருவாக்குவதில் பரபரப்பாக முனைந்தது. தரப்பரிசோதனைக்கான நேரம். எதிரணியின் பொம்மைகளை தேர்வு செய்யத் துவங்கிய மும்தாஜ் ‘தையல் பிரிந்திருக்கிறது.. ஓட்டை’ உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி சில பொம்மைகளை நிராகரித்து விட்டு இரண்டே பொம்மைகளை போனால் போகிறதென்று தேர்வு செய்தார்.
கொலைவெறியுடன் வந்தார் புதிய சூப்பர்வைசரான யாஷிகா. ‘உள்ளே முக்கியமான டாக்குமெண்ட் இல்ல. இந்த பார்ம் ரிஜக்ட்டட்’ என்கிற RTO அதிகாரி ‘இந்தியன்’ செந்தில் போல ஒவ்வொன்றையும் ஏதோவொரு காரணம் காட்டி அதிரடியாக கீழே தூக்கிப் போட்டார். எல்லோர் கவனமும் இதில் இருக்கும் போது பின்னால் நின்று கொண்டிருந்த மஹத் வேகமாக வெளியே ஓட.. அவரது நோக்கத்தைப் புரிந்த ரித்விகா பின்னாலேயே துரத்திக் கொண்டு ஓடினார்.
மஹத் எதிரணியின் பணப்பெட்டியை நெருங்கும் போது ரித்விகா சமயோசிதமாக ஒரு காரியம் செய்தார். இவர்களின் பணப்பெட்டியை திறக்க ரித்விகா முயல, மஹத் தன் நோக்கத்தை கைவிட்டு ரித்விகாவை நோக்கி கொலைவெறியுடன் ஓடிவந்து தள்ளி விட, ரித்விகா கீழே சாய்ந்தார். மஹத் அப்படித் தள்ளி விடுவதற்கான அவசியமே இல்லை. ஏனெனில் அவரது அணியைச் சேர்ந்த சென்றாயன் பின்னாலேயே ஓடிவந்து அப்போது பணப்பெட்டியை பாதுகாப்பாக கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்.
‘அவங்க பெட்டில பணமே இல்லை’ என்ற புகாரை வைத்தார் ரித்விகா. ‘அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது. உள்ளேதான் பணத்தை வெச்சிருக்கோம். வேணுமின்னா பார்த்துக்கங்க” என்றது எதிரணி. ‘பாதி பணத்தை மும்தாஜ் பாக்கெட்டில் வைத்திருக்கிறார்’ என்று கற்பனையான குற்றச்சாட்டை கூறினார் பாலாஜி. இதை எதிரணி கடுமையாக மறுத்தது. “விளையாட்டை விளையாட்டா பார்க்கணும். அந்தப் பொண்ணுக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்றது?’ என்ற பாலாஜியின் கேள்வி சரியே. “ஓடி வந்த ஸ்பீட்ல விழுந்தேன்’ என்பது மாதிரி மஹத் அளித்த விளக்கம் மழுப்பல்தான். “யாரும் இல்லை அதனால்தான் ஓடிவந்தேன்’ என்று சொன்ன மஹத்திடம், ‘நீங்க கூடத்தான் இங்க யாரும் இல்ல. நாங்க ஓடி வந்தோமா?” என்று பாலாஜியின் கேள்வியில் தர்க்கம் இருந்தது. என்றாலும் ஏற்கெனவே தங்களின் பொருட்களை பறிகொடுத்திருக்கும் யாஷிகா அணி தொடர்ந்து கவனமாக இருந்திருக்க வேண்டும்.
“யாஷிகா எல்லா பொம்மைகளை ரிஜக்ட் செய்ததால்தான் மஹத் தன் கோபத்தைக் காட்டினார். இதை யாஷிகாவிடம் நேரடியாக காட்ட வேண்டியதுதானே?” என்று பாலாஜியும் ரித்விகாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். ரித்விகாவிற்கு ஏதாவது ஆகி விட்டதா என்கிற கரிசனத்தில் டேனியிடம் மும்தாஜ் விசாரிக்க, டேனி பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ‘ஏன் என் மேல கோபத்தைக் காண்பிக்கறீங்க.. நானா தள்ளி விட்டேன்?” என்று மும்தாஜ் வருத்தப்பட்டது நியாயமானது. தங்கள் அணி செய்யும் மோசடிகளை தடுக்கவோ, எச்சரிக்கவோ மும்தாஜ் தயங்குவதில்லை. அதை நியாயப்படுத்தவும் அவர் முனைவதில்லை. இந்த வகையில் மும்தாஜின் நேர்மை பாராட்டத்தக்கது.
“நீங்களும் ஒரு பொண்ணுதானே.. ஒரு பொண்ணை அவன் அடிச்சது நியாயமா.. வெளிய இருந்தா கேஸாயிடும்.. பார்க்கிறவங்க காறித் துப்புவாங்க.. உங்க மேல நான் அப்படி இடிச்சா.. சும்மா இருப்பீங்களா?’ என்றெல்லாம் கோபத்தில் பாலாஜியை வார்த்தைகளை விட, இப்போது கோபமடைவது மும்தாஜின் தரப்பாக இருந்தது. “ஏன் உங்க கோபத்தை சம்பந்தமில்லாம என் கிட்ட காண்பிக்கறீங்க.. விசாரிச்சது ஒரு குத்தமா, அவர் கிட்ட காமிங்களேன்’ என்று மும்தாஜ் கேட்டது பாலாஜியின் ஈகோவைத் தூண்டி விட்டது. “ஏன் அவன் எதிர்க்கயே.. சொல்லுவனே.. தலையைச் சீவிடுவானா?” என்று மஹத் வந்ததும் வீறாப்பாக பேசினார் பாலாஜி. ‘உடல்வன்முறையை இனி காட்டாதீர்கள். உன்க்கு யார் மேல கோபம்?’ என்று ரித்விகா சொன்னதும் சற்று அடங்கினார் மஹத். ‘நான் அடிக்கவில்லை. தள்ளிதான் விட்டேன்’ என்று மஹத் சொன்னது ஒருவகையில் சரி. ரித்விகாவை எப்படியாவது தடுப்பதுதான் மஹத்தின் நோக்கமாக இருந்தது. அடிப்பது அல்ல. ‘ஓகே ஸாரி’ என்றார் மஹத்.
இத்தோடு இந்தப் பஞ்சாயத்து ஓய்ந்திருக்க வேண்டும். ஆனால் டேனியால் சும்மா இருக்க முடியவில்லை. அதுவரை அடக்கி வைத்திருந்த கேள்விகளை இப்போது எழுப்பினார். ‘ஏன் நேத்திக்கு அப்படி என்னை தள்ளினே நீ’ என்று ஆரம்பிக்க.. ‘நீதான் என் கையை பிடிச்சு அழுத்தினே” என்று டெமோவுடன் விளக்கினார் மஹத். இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்து மற்றவர்களுக்கும் பரவியது. “விடியற்காலைல நீ எங்க பொருட்களை வந்து எடுத்துட்டுப் போனே.. நாங்க உன்னை துரத்திட்டு வந்தமா.. தள்ளி விட்டமா…அதே இடத்துல நீ இருந்திருந்தா நாங்கள்லாம் காலி” என்று ரித்விகா சொன்ன பாயிண்ட் சரியானது.
“எல்லாம் நியாயமா விளையாடுங்கப்பா” என்று ஊர்ப்பெரியவர் மாதிரி நியாயஸ்தம் பேச சென்றாயன் முன்வர, ‘நாங்க நியாயமாத்தான் விளையாடறோம்” என்று எரிந்து விழுந்தார் ரித்விகா. சந்தைக்கடை மாதிரி ஒரே இரைச்சல். ஜனனியும் வைஷ்ணவியும் மட்டும் அமைதியாக இருந்தார்கள்.
“மத்தவங்க கிட்ட சண்டை போட்டப்பல்லாம் அப்புறம் நீ ஸாரி கேட்ட. ஆனா என் கிட்ட கேக்கலை. இருந்தாலும் கம்முனு இருந்தேன்” என்று டேனி ஆரம்பித்ததும் இவருக்கும் மஹத்திற்கும் மறுபடியும் பஞ்சாயத்து துவங்கியது. சிறுபிள்ளைகள் போல் மற்றவர் சொல்வதை தானும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாலாஜியின் சாட்சியத்தை வைத்து டேனி பேசியதும் ‘அசிங்க அசிங்கமா ஒருத்தரை திட்டிட்டு அவர் பக்கத்துலயே உக்காந்து பேசிட்டிருக்க” என்று பழைய பஞ்சாயத்தை மஹத் போட்டுக் கொடுக்க, ‘பச்சோந்தின்னு’ ஆரம்பிச்சது யாரு’ என்று டேனி பதிலுக்கு கேட்க.. பழைய குப்பைகள் வெளியே வந்து நாறின.
எங்கோ துவங்கிய ஒரு சண்டை, நெருப்பு பொறி மாதிரி எப்படிப் படர்ந்து பரவும் என்பதற்கான உதாரணமாக இந்தச் சம்பவத்தைக் காண முடியும். இதிலிருந்து நமக்கான பாடங்களையும் எடுத்துக் கொள்ள முடியும். “அடிதடில்லாம் வேணாம். நாமள்ளலாம் நடிகர்கள்.. மூஞ்சிதான் முக்கியம்” என்று ஒருபக்கம் சென்றாயன் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது நியாயமான விஷயம்.
**
‘கெடக்கறதுல்லாம் கெடக்கட்டும், கெழவனைத் தூக்கி மனையில வை” என்கிற பழமொழி மாதிரி.. வெளியே எத்தனை சண்டை நடந்து கொண்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அதில் பெட்ரோல் ஊற்றுவதிலேயே கவனமாக இருக்கிறார் பிக்பாஸ். பொம்மைகளின் விலையை ஏற்றி போட்டியாளர்களை இன்னமும் ஆவேசப்படுத்தினார்.
‘வீட்டின் தலைவியான யாஷிகா பாரபட்சத்தோடு நடந்து கொள்கிறார். என்னையும் மஹத்தையும் அதிகமுறை பாத்திரம் சுத்தம் செய்யச் சொல்கிறார். அவரது அணிக்கு சொல்வதில்லை’ என்கிற புகாரை ஜனனி மும்தாஜிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘இனி மூலப்பொருட்கள் அனுப்புவதற்கு முன் சைரன் ஒலி வராது” என்று ஆட்டத்தில் ஒரு புதிய திருப்பத்தை அமைத்தார் பிக்பாஸ். சில நிமிடங்களுக்குப் பின் கன்வேயர் பெல்ட் நகரும் சத்தம் கேட்டு போட்டியாளர்கள் ஓடிவந்தனர். காரசாரமாக நடந்த விவாதங்களின் பயன் இப்போது தெரிந்தது. முன்பு போல் தள்ளுமுள்ளு இல்லாமல் ஒருவர் பின் ஒருவராக பொருட்களை எடுத்துக் கொண்டனர். ‘குட் பாய்’ என்று மஹத்தைப் பாராட்டினார் மும்தாஜ்.
காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதகுலம் மெல்ல மெல்ல நாகரிக பாதையில் நுழைய பல நூற்றாண்டுகள் ஆன வரலாற்றை இது நினைவுப்படுத்துகிறது. “ஆனா இது ரொம்ப மொக்கையா இருக்கே” என்று யாஷிகாவும் மஹத்தும் சலித்துக் கொண்டார்கள். ‘பொண்ணுங்கள்லாம் முன்னாடி வாங்க.. நாங்க பின்னாடி இருக்கோம்” என்று ஆண்கள் பின்வாங்க ‘ஏய்.. பொம்பளைங்க சண்டை போட்டா பிரச்னை தீரவே தீராதுப்பா..” என்கிற மகத்தான உண்மையைச் சொன்னார் சென்றாயன். ஆனால் இந்த அமைதி கொஞ்ச நேரம்தான். மறுபடியும் காட்டுமிராண்டித்தனம் துவங்கியது. “மஹத்.. நீ ஏன் பயப்படறே.. தைரியமா பண்ணு. கேம்னா கேம்தான்” என்று விஷபாட்டில் பின்னால் இருந்து மஹத்தை ஏற்றி விட்டது.
செய்த பொருட்களுக்கான தரப்பரிசோதனை. மறுபடியும் ‘இந்தியன்’ செந்திலாக மாறிய யாஷிகா, ‘உள்ளே டாக்குமெண்ட் இல்ல. ரிஜக்ட்டட்’ என்று ஆரம்பித்தார். கடுமையான நிராகரிப்புகளுக்குப் பிறகு பரஸ்பரம் தலா ஒரு பொம்மையைத்தான் தேர்ந்தெடுத்தனர்.
“ஓ.. பிக்பாஸூ’ என்று ஐஸ்வர்யா கொஞ்சிக் கொண்டிருக்க, ‘இங்க இருக்கறது எல்லாமே மென்ட்டலா இருக்கே” என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார் பாலாஜி. சூப்பர்வைசர் பதவி போனதும் பாலாஜி இன்னமும் மோசமாகி விட்டார் ‘அவர் கம்பெனில இருந்து VRS வாங்கிட்டார்” என்று மற்றவர்கள் கிண்டலடிக்கும்படி மந்தமாக இருக்கிறார்.
கன்வேயர் பெல்ட் மறுபடி நகரத் துவங்க எல்லோரும் துள்ளிக் குதித்து ஓடி வந்தனர். ஆனால் பொருட்கள் எதுவும் வரவில்லை. ‘அய்யா பிச்சை போடுங்கய்யா’ என்று ஆளுக்குள் ஆள் ஜாலியாக கூப்பாடு போடத் துவங்கினார்கள்.
மறுபடி தரப்பரிசோதனை. ஒரேயொரு பொம்மையை தயார் செய்திருந்த மும்தாஜ், அதை குழந்தையைப் போல கருணையுடன் தூக்கிக் கொண்டு வர, இரக்கமேயில்லாத ‘இந்தியன்’ செந்தில் ‘கண்ணு சரியில்ல’ என்று நிராகரித்தார். ‘நான் அப்பவே சொன்னேன். நீ குப்பைத் தொட்டிக்குத்தான் போவே..’ என்று பொம்மையிடம் பேசிய ஜனனி சேம் சைட் போட “ஏய் ..லூஸூ” என்று அவரை ஜாலியாக திட்டினார் மும்தாஜ்.
யாஷிகாவின் இந்த அராஜகத்தினால் காண்டாகிய மஹத், ‘அவங்க செய்யற எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ணிடுங்க’ என்று மும்தாஜிடம் ஐடியா தர ‘நம்ம கிட்ட நெறய பணம் இருக்கு. நாமதான் ஜெயிப்போம். அதனால நியாயமாவே நடந்துப்போம். அவங்களும் பாவம்.. கஷ்டப்பட்டு வேலை செய்யறாங்க” என்றார் மும்தாஜ். பல சமயங்களில் பிக்பாஸ் வீட்டின் நீதி தேவதையாக மும்தாஜ் இருக்கிறார். பாராட்டுக்கள்.
“என்ன இழவு இது.. இவங்க சமாதானமா போயிடுவாங்க போலயே’ என்று விரக்தி அடைந்த பிக்பாஸ், பெட்ரோலுக்குப் பதிலாக பெட்ரோல் டாங்க்கையே கொட்ட முடிவு செய்தார். ‘இது பிக்பாஸ்’ என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு ‘இனி அதிக பொம்மைகளை வெல்லும் அணிக்கு ஒவ்வொரு பொம்மைக்கும் ரூ.500 போனஸ் பணம் கிடைக்கும்” என்று பாதாளக் கரண்டியால் ஆவேசத்தை கிளறி விட்டார்.
மறுபடியும் பொருட்கள் வரத்துவங்கின. யாஷிகாவும் மும்தாஜூம் அரண் அமைத்து பாதுகாக்கத் துவங்கினார்கள். ஆனால் இந்த அமைதி சற்று நேரம்தான் நீடிக்கத் துவங்கியது. மஹத்தின் அராஜகத்திற்கு ஈடாக ஐஸ்வர்யாவும் மூர்க்கமாக பதில் அளிக்கத் துவங்கினார். மும்தாஜின் எச்சரிக்கை எவரின் காதிலும் விழவில்லை. விதிகளை மீறும் போது பொருட்கள் வருவது நின்று போயிற்று. இந்தக் களேபரத்தில் மும்தாஜ் கீழே விழும் சம்பவமும் நடந்தது.
மஹத்தைக் கட்டுப்படுவதற்காக எதிரணி ஓர் உபாயத்தை கடைப்பிடித்தது. அப்பிராணிகளாக நின்று கொண்டிருந்த ஜனனி மற்றும் வைஷ்ணவியிடம் சென்று பொருட்களைப் பறிக்க ஓட, இங்கு நிற்பதா, அங்கு செல்வதா என்கிற குழப்பத்தில் தவித்தார் மஹத். இந்த விளையாட்டு ஜாலியாகவும் சற்று சீரியஸாகவும் நடந்தது. ஒரு கட்டத்தில் யாஷிகாவை அப்படியே தூக்கிச் சென்று கீழே போட்டார் மஹத். இதற்காக அனைவரும் சிரித்துத் தீர்த்தார்கள்.
மறுபடியும் பொருட்கள் வரத் துவங்க அங்கே பாய்ந்தார்கள். மழை பெய்யத் துவங்கியதும். மழையையும் பொருட்படுத்தாமல் பொருட்களுக்காக அடித்துக் கொள்ளத் துவங்கினார்கள். ‘ச்சே.. ரொம்ப அசிங்கமா இருக்கு” என்று வைஷ்ணவியும் ஜனனியும் தூரத்தில் நின்று சலித்துக் கொண்டார்கள்.
நாகரிகம் மலர்ந்திராத காலக்கட்டத்தில் மனித குலம் காட்டுமிராண்டிகளாக இருந்த போது எதிர்குழுவின் உடமைகளையும் பெண்களையும் பலவந்தமாக பறித்துச் சென்றார்கள் என்கிறது மனிதவரலாறு. ‘வலிமையானது வெல்லும்’ என்பதுதான் அப்போதைய அழுத்தமான தாரக மந்திரம். (இப்போதும் அப்படித்தான். ஆனால் மறைமுகமாக இருக்கிறது). பலவீனமானவர்கள் பலமானவர்களின் அராஜகங்களை தடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டார்கள். பிறகு மனித நாகரிகம் மெல்ல மலர்ந்து.. அரசுகள் உருவாகி. காவல், நீதி, நிர்வாகம் போன்ற நிறுவனங்கள் உருவாகி மனித குலத்தின் மூர்க்கங்கள் சற்று கட்டுப்பட்டன.
காட்டுமிராண்டி காலத்தின் ஒரு சிறுபகுதியை இந்த டாஸ்க்கின் மூலம் நம்மால் உணர முடிந்தது. நாம் மேலும் நிறைய தூரம் நகர வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. ‘நாளை’ என்று காட்டப்படும் பகுதியில் யாஷிகா இன்னமும் மூர்க்கமாக பொம்மைகளை நிராகரிக்கத் துவங்க, மும்தாஜ் அதற்கு சண்டை போடும் காட்சிகள் தெரிகின்றன.