பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கறிவேப்பிலை எண்ணெய்… கூந்தலின் தோழிகள் எண்ணெய்கள்தான்!

அரையடிக் கூந்தலோ, இடுப்பைத் தாண்டிய கூந்தலோ… சரியாகப் பராமரித்தால், எப்போதும் நீங்கள் வசீகரமாக இருக்கலாம். தன்னம்பிக்கை தரும் விஷயங்களில் கூந்தலும் ஒன்று. அழகான கூந்தலுக்கு எண்ணெய் மிக மிக முக்கியம். எந்தெந்த எண்ணெய்கள் தலைமுடிக்கு நல்லது, அவற்றை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்? டிப்ஸ் தருகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

கூந்தல்

*அழகான கூந்தலுக்கு நல்லெண்ணெய்தான் நல்ல உரம். உச்சந்தலையில் ஒரு கை வைத்து, கால் மணி நேரம் ஊறவிட்டால், உச்சந்தலை நன்கு குளிர்ந்துவிடும். உச்சந்தலைக் குளிர்ந்தால், உடல் சூடு தணிந்துவிடும். உடல் சூடு தணிந்தால், முடி உதிர்வது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கூந்தல் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். அடர்த்தியான கூந்தலில் சின்ன கிளிப் போட்டு, தோள்களின் மீது வழியவிட்டால், கல்லூரி, அலுவலகம், ஷாப்பிங் என எல்லா இடங்களிலும் நீட் லுக்கில் மிளிரலாம்.

நல்லெண்ணெய்

வசுந்தரா ‘ஏசியிலேயே தொடர்ந்து வேலை பார்ப்பதால் சைனஸ் இருக்கிறது’ என்பவர்களும், நல்லெண்ணெயை நாடலாம். நல்லெண்ணெயை லேசாகச் சுடவைத்து, ஒரு பூண்டு பல், இரண்டு மிளகு போட்டு பொரிய விடுங்கள்.  இது ஆறியதும், கூந்தலின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, ஷாம்புவோ அல்லது சீயக்காயோ பயன்படுத்தி தலைக்குக் குளித்து விடுங்கள்.

* தலைக்கு ஆலிவ் ஆயில் தடவி குளிப்பவர்கள் கவனத்துக்கு… இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், லேசாகச் சூடாக்கி தலையில் ஊறவைத்துக் குளியுங்கள். சூடாக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை எங்குத் தடவினாலும், அந்தப் பகுதியைக் கறுப்பாக்கும் தன்மைகொண்டது. அதனால், சூடாக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை நன்கு ஆற வைத்து தலைமுடி, புருவம் போன்ற இடங்களில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளியுங்கள்.

* அடுத்தது, தேங்காய் எண்ணெய். பிராண்டட் எண்ணெயிலும் கலப்படம் இருக்கிறதெ பயப்படுபவர்கள், வீட்டிலேயே இதை தயாரிக்கலாம். கொப்பரைத் தேங்காய்களை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்துப் பிழிந்து,  வடிகட்டி, இரும்பு வாணலியில் காய்ச்சுங்கள். சடசடவென வெடித்து தண்ணீர் ஆவியாகி, எண்ணெய் திரண்டு வரும்போது, அடுப்பை அணைத்து ஆறவிடுங்கள். இந்த எண்ணெயை ஒருநாள் விட்டு ஒருநாள் வேர்க்கால்களில் மட்டும் தடவி, சீப்பால் வாரிவிடுங்கள். கூந்தல் உடையாமல், சிக்கு விழாமல் இருப்பதற்கு வெளிப்புற பூச்சாகத் தேங்காய் எண்ணெய் தடவுவது ரொம்பவே அவசியம். தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து தலையில் தடவினால், சிக்கு வாடை வருகிறதா? மருக்கொழுந்து, மருதவனம், செண்பகப்பூ போன்றவற்றை உலர வைத்து எண்ணெயில் போட்டு வையுங்கள். இந்த எண்ணெயைத் தடவி வந்தால் முடியில் சிக்கு வாடையே வராது.

ஆலிவ் எண்ணெய்

* பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமின்றி, ஸ்கால்புக்கும் நல்லது. கூந்தலைப் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளும் பாதாம் எண்ணெய். இதில் 10 மில்லி எடுத்து, கொத்துமல்லி ஆயில் ஒரு சொட்டு, கறிவேப்பிலை ஆயில் (டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) ஒரு சொட்டு எனச் சேர்த்துக்கொள்ளவும். இந்த மிக்ஸ்டு ஆயிலைத் தலை முழுக்கத் தடவி, இரவு முழுக்க ஊறவிடுங்கள். காலையில் முகத்தில் எண்ணெய் வழிவதுபோல உணர்ந்தீர்கள் என்றால் மட்டும், தலைக்குக் குளியுங்கள். இல்லையென்றால் அப்படியே விட்டு விடலாம். இந்த மிக்ஸ்டு ஆயில் பொடுகுத் தொல்லை வராமல் தடுக்கும். கூந்தலும் கமகமவென மணக்கும்.