பார்ப்போரை கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு!!

மனிதாபிமானத்தை மறந்து விட்டு அது பற்றி பேசும் இன்றைய சமூகத்தில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று கேகாலை பகுதியில் பதிவாகியுள்ளது.இது மனிதர்கள் மத்தியில் அல்ல இரண்டு விலங்குகளுக்கு இடையில் நடந்த சம்பவம்.

வாழ்க்கை என்பது மிகவும் அதிசயமானது. இதில் நம்ப முடியாத பல விடயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. இதை இயற்கை என்று கூறுவதா? அல்லது இயல்பு என்று கூறுவதா?

கேகாலை – மொலகொட பிரதேசத்தில் தனியார் உணவகம் ஒன்றில் இரண்டு அபூர்வமான நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.அந்த சிறிய நண்பர்களில் ஒருவர், இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து 5 நாட்கள் ஆகின்றன. இதனால் நண்பனை பிரிந்து வாடும் ஒரு ஜீவன் பற்றிய கதையே இது.

அதாவது ஒரு குட்டி குரங்கினதும், நாய் ஒன்றினதும் நெகிழ்ச்சியான சம்பவம்.குரங்குகள் தமது குட்டியை வயிற்றில் அணைத்தபடி செல்லும். குரங்கு குட்டி ஒன்று தனது தாயுடன் இப்படி சென்று கொண்டிருந்த போது, தாய் குரங்கு மின்சாரம் தாக்கி இறந்து விட்டது.குரங்கு குட்டியை காப்பாற்றிய சுரங்கம் ஒன்றில் தொழில் புரியும் பொறியியலாளர் அதனை தனது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சாலி என அதற்கு பெயர் சூட்டியுள்ளார்.

வீட்டில் இருக்கும் மிட்டி என்ற பெண் நாய் மிகவும் அன்புடன் குரங்கு குட்டிக்கு பால் ஊட்டி தன்னுடன் வைத்துக்கொண்டுள்ளது. இருவரும் உற்ற நண்பர்களாக உலாவந்தனர்.எனினும், துரதிஷ்டவசமாக மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், குரங்கு குட்டியை கொஞ்சி விளையாடிய போது, அது அந்த நபரின் காலில் மிதியுண்டு உயிரிழந்துள்ளது.

வேறு வேறு இனங்களாக இருந்தாலும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மிகவும் பாசமாக இருந்துள்ளது. தாயை இழந்த குட்டி குரங்கு நாயை தனது தாயாக நினைத்து வந்துள்ளது.இந்த நிலையில் தனது குட்டியைப் போல் பாசத்துடன் வளர்த்து வந்த குரங்கு இறந்துள்ளதால் நாய் மட்டுமல்ல அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த சமூகமும் கவலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.