இலங்கையில் பிரசித்திப்பெற்ற மத வணக்கஸ்த்தளங்களுள் ஒன்றான சிவனொளிபாதமலையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மாற்றங்கள் அங்கு செல்லும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் தொன்மங்களும் பாரம்பரியங்களும் கடுமையாக அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்த நிலையில் நல்லாட்சியிலும் இந்த நிலை தொடர்கிறதா என மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகங்களில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டு வந்த நிலையில் தென்னிலங்கையில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களும் தற்போது அழிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சிவபூமி என திருமூலரால் சிறப்பிக்கப்பட்ட ஈழ திருநாட்டில் கதிர்காம் மற்றும் சிவனொளிபாத மலை ஆகியன சைவ தொன்மை வாய்ந்த இடங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், தற்போது புகழ் பெற்ற சிவனொளிபாத மலையின் தொடக்க பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை சைவ மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன முறுகல்களும் இன மேலாதிக்கங்களும் கடுமையாக நிலவி வந்த நிலையிலும் இவ்வளவு காலமும், சிவனடி பாதம் என இடம்பெற்றிருந்த பெயர்ப்பலகை இப்போது திடீரென கௌதமபுத்தரின் ஸ்ரீ பாதஸ்தானம் என மாற்றப்பட்டுள்ளது.
நல்லாட்சியில் இவ்வாறான ஒரு மாற்றம் இடம்பெற்றுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு விமர்சனங்களுக்கும் உட்பட்டுள்ளது.