வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு…

அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். பள்ளி ஆசிரியரான அவரது தந்தை ஒரு கவிஞரும் ஆவார்.

குவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வாஜ்பாய் முடித்தார். பிறகு குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் பெற்று இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.

பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர ஊழியராக சேர்ந்தார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட ஆர்வத்தின் காரணமாக சட்டப்படிப்பு சேர்ந்தார்.

அப்போது ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த தருணம். தேச விடுதலைக்காக தனது சட்டப்படிப்பை பாதியில் விட்டு, பத்திரிகையாளராக மாறினார்.

‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களில் பணிபுரிந்தார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ முடிவெடுத்தார்.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்றார் வாஜ்பாய். 23 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து திரும்பினார்.

ஆர். எஸ். எஸ். சின் ஒரு கிளை அமைப்பான ‘பாரதிய ஜன சங்’ அமைப்பில் தீவிரமாக பணியாற்றினார். அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார். சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்தார்.

இந்த நிலையில் 1957ல் பல்ராம்பூர் தொகுதியில் போட்டியிட்ட வாஜ்பாய், மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற உறுப்பினர்களையும் ஈர்தத்து.

ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பை வாஜ்பாய் ஏற்றார்.

1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா கட்சியுடன் இணைத்தார். அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றது. மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்க.. வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் சில காலத்திலேயே பிரதமர் மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்ய.. ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து, அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார்.

1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது.

அப்போதைய குடியரசு தலைவரான சங்கர் தயாள் ஷர்மா வாஜ்பாயை பிரதமராகப் பொறுப்பேற்க அழைத்தார். பிரதரமராகப் பதவியேற்ற அவர், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கூட்டணி கலைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்தது. மீண்டும் வெற்றி. மீண்டும் பிரதமரானார் வாஜ்பாய்.

13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவை திரும்பப் பெற்றது. அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை ஏற்படுத்த புதிய சமாதான முன்னெடுப்புகளை தீட்டினார் வாஜ்பாய்.

1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம்பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

ஆக கார்கில் போரில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. இந்த நிலையில் நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்றார் வாஜ்பாய்.

இந்த காலகட்டத்தில் காத்மண்டு மற்றும் டில்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2002ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வாஜ்பாய்.

ரசியல்வாதியாக மட்டுமின்றி படைப்பாளராகவும் வாஜ்பாய் திகழ்ந்தார். அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தனது சுயசரிதையை எழுதினார். மேலும் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.

வாஜ்பாய் பெற்ற விருதுகள்

§ 1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

§ 1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார்.

§ 1994 – ‘லோகமான்ய திலகர் விருது’

§ 1994 – ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது.

§ 1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார்.