அடிக்கடி ஏப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வயிறு நிறையச் சாப்பிட்டபிறகு இயல்பாக ஏப்பம் வருவதுண்டு. சிலர், சாப்பிட்ட பிறகு சத்தமாக ஏப்பம் விட்டால்தான் நிம்மதியாக உணர்வார்கள். ஏப்பம் வருவது இயல்பான உடலியல் நிகழ்வுகளில் ஒன்றுதான். ஒரு நாளில் ஓரிரு முறை ஏப்பம் வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சாப்பிட்டு முடித்ததும் அடிக்கடி, அதிக சத்தத்துடனும் வாடையுடனும் தொடர்ச்சியாக ஏப்பம் வந்துகொண்டே இருந்தால், வயிற்றில் ஏதோ பிரச்னை என்று பொருள். ஏப்பம் வரும்போது சாப்பிட்ட உணவுகள் எதுக்களித்து புளிப்புச் சுவையையும், நெஞ்சு எரிச்சலையும் ஏற்படுத்தும்.
இப்படி வரும் புளித்த ஏப்பம் இரைப்பையில் ஏற்பட்டிருக்கும் நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று எச்சரிக்கிறார் குடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் திருநாவுக்கரசு. புளித்த ஏப்பம் அடிக்கடி வருவதற்கான காரணங்கள் குறித்தும் விளக்குகிறார் அவர்.
“நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது உணவு. ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை நிதானமாக, ஆற அமர உக்கார்ந்து சாப்பிட்டால்தான் அது சரியான முறையில் உடம்பில் சேர்ந்து சக்தியாக மாறும். பரபரப்பான வாழ்க்கை, அழுத்தமான வேலை என்று நாம் வாழும் சூழலே மாறிப்போன பிறகு ஆர அமர உக்கார்ந்தெல்லாம் சாப்பிட யாருக்கும் நேரமில்லை. பத்தோடு பதினோறாவது வேலையாகச் சாப்பிட்டுக் கையை கழுவிட்டு ஓடுகிறோம். ஆனால் அது நல்லதல்ல.
அவசரக் கோலத்தில் சாப்பிடுவது, அடிக்கடி கார்பனேட்டட் டிரிங்ஸ் அருந்துவது, பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பழம், பழைய கோதுமை பிரெட் ஆகியவற்றை அதிகளவு சாப்பிடுவதாலும் அவஸ்தையான ஏப்பம் வரலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மாத்திரைகள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் அருந்தும் டானிக், வலிநிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றின் பக்க விளைவுகளாகவும் ஏப்பம் வரும். இவற்றையெல்லாம் தவிர்த்தபிறகும் தொடர்ந்து ஏப்பம் வந்தால் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் அமிலப் பின்னூட்ட நோயின் (GERD – Gastro Esophageal reflux disease) அறிகுறி என்று புரிந்துகொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவானது உணவுக் குழல் வழியாக இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பைக்குள் சென்ற உணவு எதுக்களித்து, அமிலங்களோடு இணைந்து மீண்டும் உணவுக் குழலுக்கு வருவதையே `அமிலப் பின்னூட்ட நோய்’ என்கிறோம். இரைப்பையிலிருந்து மேலெழும் அமிலத்தால் உதரவிதான ஜவ்வு, உணவுக்குழல்கள் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு எரிச்சல் ஏற்படும்.
இரைப்பையையும் உணவுக் குழலையும் பிரிக்கும் உதரவிதானத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், இரைப்பை திசுக்களின் இயக்கம் குறைந்து போவது, இரைப்பை அழற்சி நோய், இரைப்பை மற்றும் சிறு குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண், இரைப்பையில் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori – H. pylori) பாக்டீரியாக்களின் அதிகப்படியான வளர்ச்சி ஆகியவற்றால்கூட நெஞ்செரிச்சல் ஏற்பட்டு புளித்த ஏப்பம் வெளிப்படும். இது தொடர்ந்தால் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
செரிமான மண்டலத்தில் என்சைம் கோளாறுகள், செரிமான பிரச்னைகள் இருந்தால் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமடையாது. குறிப்பாக, நம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் சரியாக செரிமானமாகவில்லை என்றாலும் தொடர்ந்து ஏப்பம் வரும். மனஅழுத்தம் இருந்தாலும் அடிக்கடி ஏப்பம் வரும்.
புளித்த ஏப்பம்
தொடர்ந்து நெஞ்செரிச்சலோடு புளித்த ஏப்பம் வந்தால் இரைப்பைப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. புளித்த ஏப்பம் பிரச்னை உள்ளவர்கள் அதிகக் காரமுள்ள உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ சாப்பிடக் கூடாது. புகையிலை, மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். இரவு நேரத்தில் அரை வயிறு மட்டுமே சாப்பிட்டு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் கழித்து உறங்க வேண்டும்.
நேரத்துக்குச் சாப்பிடுவதோடு, ஏப்பம் வருவதற்குக் காரணமான உணவுகள், மருந்து மாத்திரைகளைத் தவிர்க்கவும் வேண்டும். வயிறு என்பது மிகவும் மென்மையான பகுதி. ஆனால் மிகக்கடுமையான வேலைகளைச் செய்கிறது.அதனால் அதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. வயிற்றில் எந்தப் பிரச்னை வந்தாலும் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும்.
ஏப்பம் தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள். தொடர்ந்து புளித்த ஏப்பம் வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். எண்டோஸ்கோப்பி செய்வதன் மூலம் உணவுக் குழலிலோ அல்லது இரைப்பையிலோ ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
நம் உடலில் வழக்கத்துக்கு மாறாக நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துமே உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வெளிப்படுத்தும் காரணிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் `ஏப்பம் தானே’ என்று அலட்சியம் செய்யாமல் உடனடியாகப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வது நமது ஆரோக்கியத்துக்கு நல்லது” என்கிறார் திருநாவுக்கரசு.
புளித்த ஏப்பம் மற்றும் அதையொட்டி வரும் நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு போன்றவற்றை அன்றாடச் சமையலில் சேர்க்கும் இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சில எளிய மூலிகைகள் மூலம் எளிதாகக் குணப்படுத்தலாம். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி அது மூழ்குமளவு எலுமிச்சைச்சாறு விட்டு தேவைக்கேற்ப இந்துப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த நிலையில் அந்த இஞ்சித்துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்து வந்தால் புளித்த ஏப்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
உணவில் அடிக்கடி பிரண்டைத் துவையல், வேப்பம்பூ ரசம், இஞ்சித் துவையல், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலைத் துவையல் செய்து சாப்பிட்டு வருவது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புளித்த ஏப்பம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும். அதிமதுரத்தைப் பொடியாக்கிச் சுவைப்பது, சாப்பிட்டவுடன் வெற்றிலை போடுவது, புதினா ஜூஸ் போன்றவையும் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.