ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் தொடக்கம்…

ஆசிய விளையாட்டுப்போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. இந்தியா சார்பில் 542 வீரர், வீராங்கனைகள் இந்த ஆசியப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிகப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை இந்தியா தட்டி சென்றது.

asia

இறுதியாக 2014ல் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை பெற்றது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 8வது இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தாவில் இன்று தொடங்க உள்ளது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் பங்கேற்கின்றன.

மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், இந்தியா சார்பில் தேசியக் கொடியை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஏந்திச் செல்கிறார். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை முதல் போட்டிகள் நடைபெற உள்ளன.

மொத்தம் 40 விளையாட்டுகள் 462 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றன. இந்தியா சார்பில் சதீஷ் சிவலிங்கம், நீரஜ் சோப்ரா, சாய்னா நேவால், பிவி சிந்து உள்ளிட்ட 542 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா அதிகப் பதக்கங்களை வென்று சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.