ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மூன்று மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்திலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையிலான அதிகாரிகளே இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைக் குழுவில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பி.ஜே திசேரா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
நேற்றுக்காலை, 11.32 மணியளவில், மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குள் விசாரணைக்காகச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், பிற்பகல் 2.20 மணியளவில் விசாரணைகளை முடித்துக் கொண்டு வெளியேறிச் சென்றனர்.
விசாரணைகளின் போது, மகிந்த ராஜபக்சவுடன் சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா, அதிபர் சட்டவாளர் ஜெயந்த வீரசிங்க மற்றும் சட்டவாளர் அலி சப்ரி ஆகியோரும் உடனிருந்தனர்.