தமிழக மாவட்டங்களில் அபாய நிலை.. மீட்பு உபகரணங்களோடு ஆயுதப்படையினர் விரைவு: அவசர கால கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டில் வந்தது..!

மேட்டூர், மாயனூர், முக்கொம்பு, கல்லணை ஆகிய அணைகளிலிருந்து வரும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட உள்ளது.

இதனையடுத்து கொள்ளிடம் ஆற்றில் வரும் உபரி நீர் முழுவதும் அப்படியே கடலுக்கு திறந்து விடுவதை தவிர வேறு வழியில்லை.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி 90 ஆயிரம் கனஅடிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றில் நீர் வெளியேறிய போதே படுகை கிராமங்களில் விளை நிலங்கள், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை 1.25 லட்சம் கனஅடி நீர் சென்றது. இது தொடர்ச்சியாக அதிகரித்து இன்று காலை 2.50 லட்சம் கன அடியாக உபரி நீர் வெளியேறியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெள்ள பாதிப்பு இடங்களான வாடி, கோபாலசமுத்திரம், நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, அளக்குடி ஆகிய ஊர்கள் அடையாளம் காணப்பட்டு நாகையிலிருந்து வெள்ள மீட்பு உபகரணங்களோடு ஆயுதப்படை பிரிவிலிருந்து 34 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

14 தங்குமிட முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொள்ளிடம் ஆற்று வெள்ள நீர் கடலில் கலக்குமிடத்தில் பழையார் துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பழையார் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.