கர்நாடகத்தில் பெய்து வரும் பெருமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி கட்டுக்கடங்கா வெள்ளப்பெருக்கின் காரணமாக மேட்டூர் அணையையும் நிரப்பியுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. வரலாறு காணாத வகையில் 2 லட்சம் கன அடி தண்ணீருக்கு மேல் காவிரி, கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு, கல்லணைக் கால்வாய்களில் கொள்ளளவிற்கு மேல் பாய்வதால் காவிரி கொள்ளிடம் கரைகளில் வாழும் மக்கள் பாதிப்படையும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆறுகளின் கரைகள் எங்கு உடையும் என்று அடையாளப்படுத்த முடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் உள்ளது. அரசின் அறிவிப்புகளும் மக்களை அச்சுறுத்துவதாக உள்ளதே தவிர, ஆக்கப் பூர்வமான நடவடிக்கை ஏதும் இல்லை.
ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள் தூர்வாரப்படாததால் கடைமடை பகுதிகளுக்கு கட்டற்று தண்ணீர் வந்தும் பயன்படாத நிலை உள்ளது.
அவசர கோலத்தில் நடைபெற்ற மராமத்து பணிகளும் முழுமை அடையாமல் அரசு ஒதுக்கியநிதி 500 கோடி ரூபாயும் ஆளும் கட்சி பிரமுகர் களுக்கும், அதிகாரிகளுக்கும் சென்று சேர்ந்து இருக்குமோ? என்று தான் நடைபெற்றுள்ள வேலைகளை பார்க்கும் போது தெரிகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளம், எங்கே உடைப்பு ஏற்படும் என்பதும், எவ்வளவு பெரிய பாதிப்புகளை மக்கள் சந்திக்கப்போகிறார்கள் என்பதும், அரசு நிர்வாகம் மதிப்பிடமுடியாத நிலை உள்ளது.
பொது மக்களின் அச்சத்தைப் போக்கவும், வெள்ளப் பெருக்கினை பாதிப்பில்லாமல் பயன்படுத்தவும், பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.