இது இயற்கை பேரழிவின் காலம்! இனியும் பூமியை அழிவிலிருந்து காப்பாற்றுவது சாத்தியமா?

நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நீண்ட பதிவு

கேரளாவில் பெருமழை, காவிரியில் வெள்ளம், வட இந்தியா மாநிலங்களில் புழுதிப்புயல், மும்பையில் பெருவெள்ளம் என்கிற செய்திகளை நாம் எளிதாக கடந்து செல்கிறோம். இனி வரப்போகும் வடகிழக்கு பருவமழைக்காலம் என்ன செய்யப்போகிறது என்கிற அச்சம் கலந்த எதிர்பார்ப்பும் நமக்கு இருக்கிறது!

ஆனால், இவை எல்லாமே ஒரு புதிய உலக நியதிக்குள் நாம் வந்துவிட்டோம் என்பதையே காட்டுகின்றன! இனி இயற்கை சீற்றங்கள் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே செல்லும். கடந்த சில ஆண்டுகளில் நாம் எவற்றை வரலாறு காணாத பேரழிவுகள் என்று கருதினோமோ, அவை இனி சாதாரணம் ஆகிப்போகும். அவற்றை விட மிகக் கடுமையான இயற்கை சீற்றங்களை அடுத்த சில ஆண்டுகளில் காண்போம். .

பெரு மழை, பெரு வெள்ளம், கடும் சூறாவளி, கடும் வறட்சி, காட்டுத்தீ, புழுதிப்புயல், புதிய புதிய தொற்றுநோய்கள், வேளாண்மையில் வீழ்ச்சி – இவை எல்லாமும் இனி அதிகரித்துக்கொண்டே செல்லும். ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு இடையிலான இழப்புகளை இனி கணக்கிட்டால், அது அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளை விடவும் மோசமானதாக இருக்கும்.

நாம் இதுவரை எவையெல்லாம் முக்கியமான சிக்கல்கள் என விவாதித்தோமோ, அவை அனைத்தையும் விட, இனி இயற்கை பேரழிவு மாபெரும் ஆபத்தாக மாறிவிடும்! இதற்கு காரணம் புவி வெப்பமடைவதால் நேரும் காலநிலை மாற்றமே ஆகும்.

“புவி வெப்படைய காரணம் என்ன?”

நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் கண்டுபிடிப்பு தொழிற்புரட்சியை வேகப்படுத்தியது. அந்த தொழிற்புரட்சியில் முன்னணியில் இருந்த நாடுகள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தன. அந்த நாடுகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. கூடவே, கார்ப்பரேட் முதலாளித்துவ பொருளாதார முறை வளர்ந்தது. தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் இதனை மிக மோசமான பேரழிவாக மாற்றிவிட்டது.

ஒரு காலத்தில் மனித வாழ்க்கைக்கும் இயற்கைக்குமான உறவு – ஒரு அன்னைக்கும், அவளிடம் பால் குடிக்கும் குழந்தைக்குமான உறவாக இருந்தது. இன்று கார்ப்பரேட் பேராசை உலகம் அதனை ‘பூதகியிடம் இரத்தம் குடித்த கிருஷ்ணனின் உறவாக’ மாற்றி விட்டது (அன்று, கிருஷ்ணன் பூதகியிடம் இரத்தம் குடித்து கொன்றார். இன்று, நாம் பூமித்தாயை கொலை செய்கிறோம்!).

1860 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மொத்தம் 1993 ஜிகா டன் கரியமில வாயு பூமியின் வளிமண்டலத்தில் கலக்கவிடப்பட்டது (ஒரு ஜிகா டன் என்பது 100 கோடி டன் ஆகும்). அவ்வளவு கரியமிலவாயுவும் இப்போதும் வளிமண்டலத்திலேயே நீடிக்கிறது. அவற்றோடு ஆண்டுதோரும் வெளிவிடப்படும் கூடுதல் கரியமிலவாயுவும் சென்று சேர்கிறது. 1990 ஆம் ஆண்டில் உலகில் வெளியான கரியமில வாயுவின் மொத்த அளவு 20 ஜிகா டன் ஆகும். இதுவே 2017 ஆம் ஆண்டில் 32.5 ஜிகா டன் ஆகும். இப்படியாக ஆண்டுக்காண்டு கரியமிலவாயு வெளியாகும் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இவ்வாறு, கடந்த 150 ஆண்டுகளில் புவியின் வளிமண்டலத்தில் கலக்க விடப்பட்ட கரியமிலவாயுவில் 22% அமெரிக்க நாட்டிலிருந்தும், 18% ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், 13% சீனாவில் இருந்தும் கலக்க விடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருந்தும் இந்தியாவின் பங்கு 6% அளவு மட்டுமே!

இந்தக் கரியமிலவாயு வளிமண்டலத்தின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. 1850 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையே புவியின் மேற்பரப்பு வெப்பநிலையில் சராசரியாக 1% டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது கடந்த 11,000 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை ஆகும். இந்த வெப்பநிலை ஆண்டுக்காண்டு அதிகரித்து செல்கிறது! அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில், இந்த வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸ் அளவை கடக்கும் என கணிக்கப்படுகிறது.

“உலகை காப்பாற்றாமல் – தவற விடப்பட்ட வாய்ப்பு!”

பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதாலும், காடுகளை அழிப்பதாலும் உலகின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் காலநிலை மாறுகிறது. இந்த பேராபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற உறுதியான எச்சரிக்கையும், அதற்கேற்ப ஐநா அவையின் சரியான நடவடிக்கைகளும் 1979 – 1989 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே முன்வைக்கப்பட்டது.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளும் அந்த நல்வாய்ப்பை திட்டமிட்டு தோற்கடித்தனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வெறி, பணம் படைத்தோரின் ஊதாரித்தனமான வாழ்க்கை முறை – இவற்றுக்காக உலக மக்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டுவிட்டது.

அதற்குபின் 2009 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது. புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே பூமியில் மனித வாழ்க்கையை காப்பாற்ற முடியும் என்கிற கோரிக்கை 2009 ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டது. இதற்காக கோபன்ஹெகன் ஐநா காலநிலை மாநாடு கூட்டப்பட்டது.

ஆனாலும், அமெரிக்கா போன்ற குற்றவாளி நாடுகள் (அதாவது, புவி வெப்பம் அதிகரிக்க காரணமான நாடுகள்) மட்டுமின்றி, இந்தியா போன்ற ஏழை நாடுகளும் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும். கூடவே, கரியமில வாயுவை குறைக்க எந்தவொரு நாட்டுக்கும் சட்டப்படியான அளவை நிர்ணயிக்கக் கூடாது. எல்லா நாடுகளும் தாமாக முன்வந்து கரியமில வாயுவை குறைக்க வேண்டும் – என்கிற மோசமான கோரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன் வைத்தன. அதனால் 2009-ல் கோபன்ஹெகன் ஐநா காலநிலை மாநாடு படுதோல்வி அடைந்தது.

கடைசியில், “இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் கரியமில வாயுவை குறைக்க வேண்டும், ஒவ்வொரு நாடும் தாமாக விரும்பும் அளவு குறைத்தால் போதும், எல்லா நாடுகளும் சேர்ந்து 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழாக வெப்பநிலை அதிகரிப்பை குறைக்க வேண்டும்” என்கிற பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டில் உலக நாடுகளால் ஏற்கப்பட்டது.

(இதில் 2 டிகிரி செல்சியஸ் இலக்கு என்பது உலகம் அழியாமல் தடுக்க 50 : 50 வாய்ப்புள்ள இலக்கு ஆகும். அதாவது, இந்த லட்சியத்தை எட்டினால் உலகம் அழியாமல் இருக்க 50% வாய்ப்பு உள்ளது!)

இந்த மோசமான பாரிஸ் உடன்படிக்கை கூட, அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனக்கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிலிருந்து வெளியேறி விட்டார்.

“பூமி அழியாமல் காப்பாற்ற மீதமிருக்கும் வாய்ப்பு என்ன?”

கரியமில வாயு வெளியாகும் அளவை உடனடியாக குறைக்க வேண்டும். அதாவது பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். இது ஒன்றுதான் பூமியின் அழிவை தடுக்கும் வழி ஆகும். இவ்வாறு பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டை ஒரே நாளில் நிறுத்துவது சாத்தியம் இல்லை. எனவே, இவற்றின் பயன்பாடு அதிகமாகிக் கொண்டே செல்வதை ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்தி, பின்னர் படிப்படியாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு கரியமில வாயு வெளியாகும் அளவை கட்டுப்படுத்துவதற்கான ஆண்டாக 2015 இருக்க வேண்டும் என அறிவியலாளர்கள் கணித்தனர். இப்போது அதுவும் கடந்துவிட்டதால், 2020 ஆம் ஆண்டில் இதனை கட்டுப்படுத்தி, 2040 இல் பூஜ்யம் ஆக்க வேண்டும் என அறிவியலாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள். 2017 ஆண்டில் 32.5 ஜிகா டன் கரியமிலவாயு வெளியானது. இது 2020 இல் 37 ஜிகா டன்னாக அதிகரிக்கலாம். ஆனால், அதன் பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு 2040 ஆம் ஆண்டில் ‘பூஜ்யம்’ என்கிற இலக்கை அடைய வேண்டும்!

“இன்றைய சூழல் என்ன?”

பாரிஸ் காலநிலை உடன்படிக்கை குறிப்பிட்டபடி 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கூட, கரியமில வாயு வெளியேற்ற அளவை குறைக்க உலக நாடுகள் கூட்டாக முன்வரவில்லை. இன்றைய கணிப்புகளின் படி, பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் உலக நாடுகள் செயல்பட 20 இல் 1 வாய்ப்பு உள்ளது. அதாவது 5% அளவுக்கு மட்டுமே இது நடைமுறையில் சாத்தியம்!

இப்போதைய பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட கரியமிலவாயு வெளியேற்ற அளவானது 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலையை உயர்த்துவதாக இருக்கிறது. இதுவும் கூட உண்மையில் நடக்குமா என்பது சந்தேகம் தான்!

ஆனால், அறிவியல் உண்மைகளின் படி 1.5 டிகிரி செல்சியஸ் அளவு மட்டுமே பாதுகாப்பானது. அதற்கு மேலான எல்லாமும் ஆபத்துதான்.

“# 2 டிகிரி செல்சியஸ் உயர்வு”

ஒருவேளை பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் படி 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தினால் – உலகின் உள்ள பவளப்பாறைகள் அழியும், கடலோரங்கள் சில மீட்டர் கடல்நீரில் மூழ்கும், அரேபிய வளைகுடா நாடுகளும் சிறிய தீவு நாடுகளும் இல்லாமல் போகும்.

“# 3 டிகிரி செல்சியஸ் உயர்வு”

இப்போது உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கட்டுப்படுத்தினால், மேற்கண்ட பாதிப்புகளுடன், உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள கடற்கரை நகரங்கள் அனைத்தும் கடல்நீரில் மூழ்கும்.

“# 4 டிகிரி செல்சியஸ் உயர்வு”

ஒருவேளை எந்த நாடும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டால் – அதாவது, அமெரிக்காவும், கார்ப்பரேட் நிறுவனங்களும் சொல்கிறபடி அரசுகள் நடந்தால் – இந்த வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ், அல்லது 5 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கும்.

4 டிகிரி செல்சியஸ் என்பது உலகின் எல்லா நாடுகளும் பாலைவனம் ஆகும் காலம் ஆகும். 5 டிகிரி செல்சியஸ் என்பது பூமியில் மனித இனம் பூண்டோடு அழியும் காலம் ஆகும்!

இந்த ஆபத்துகள் எல்லாம் எதிர்காலத்தில் வரக்கூடியவை அல்ல. அவை ஏற்கனவே தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இப்போதைய தலைமுறையினர், (தோராயமாக 2050 ஆம் ஆண்டு வரை) மிக மோசமான இயற்கை சீற்றங்களை சந்திப்பார்கள். அதற்கு அடுத்த தலைமுறையினர் (2080 ஆம் ஆண்டுவரை) சமாளிக்கவே முடியாத இயற்கை சீற்றங்களையும், கடல்நீர் உட்புகுதலையும், பாலைவனமாதலையும் எதிர்கொள்வார்கள். அதற்கும் அடுத்த ஓரிரு தலைமுறையில் மனித இனம் பூமியில் இல்லாமல் போகும்!

கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளும், பெரும் பணக்காரர்களும், இயற்கையை சீரழித்து ஏழேழு தலைமுறையினருக்கு பணம் சேர்த்து வைத்துள்ளனர். ஆனால், அடுத்த சில தலைமுறைகள் காலத்திற்கு பின்னர், அந்த பணம் இருக்கும். உலகில் மனிதர்கள் தான் இருக்க மாட்டார்கள்!

இவை கற்பனை கதைகள் அல்ல. அறிவியல் பூர்வமாக கணிக்கப்பட்டுள்ள உண்மைகள் ஆகும்.

“மீதமிருக்கும் நம்பிக்கை என்ன?”

1990 ஆம் ஆண்டுகளில் உலகை காக்கும் உடன்படிக்கையை செயல்படுத்தியிருந்தால் – இந்நேரம் இந்த பூமி பேராபத்தில் இருந்து தப்பி இருக்கும். ஆனால், அமெரிக்காவும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பல சதிகளை செய்து அதனை தடுத்துவிட்டன.

தற்போது மீண்டும் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் படி – 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழ் வெப்பநிலை அதிகரிப்பை குறைக்க (பூமி அழியாமல் தடுக்க 50% வாய்ப்புள்ள வகையில்) ஐநா பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இவற்றை நடைமுறைபடுத்துவதற்கான விதிமுறைகள் வரும் 2018 செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கும் ஐநா காலநிலை மாநாட்டிலும், பிறகும் டிசம்பர் மாதம் போலந்தில் கூடும் ஐநா காலநிலை மாநாட்டிலும் இறுதி செய்யப்படுவதற்கான சூழல் இருக்கிறது. அதே வேளையில், 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழாகவும் குறைக்க வேண்டும் என்கிற பேச்சுகளும் இவற்றுடன் இணைத்து பேசப்படுகின்றன!

அதாவது, முதலில் எல்லா நாடுகளும் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கரியமில வாயு வெளியேற்ற அளவை குறைக்க ஒப்புக்கொண்டு, அதற்கான விதிகளை உருவாக்குவது என்றும் – பின்னர் அதையே 1.5 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி கொண்டு செல்லலாம் என்றும் பேசுகிறார்கள்!

பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு – இவற்றை ஒழிக்காமல் பூமியில் மனித இனம் உயிர்வாழ முடியாது!

“நம்மால் உலகை காப்பாற்ற முடியுமா?” என்கிற கேள்விக்கான பதில் – “நம்மால் மிக குறுகிய காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வெறியை முறியடிக்க முடியுமா? பணம் படைத்தோரின் ஆடம்பர வெறியை கட்டுப்படுத்த முடியுமா?” – என்கிற கேள்விகளுக்கான பதிலில் இருக்கிறது

மேற்கண்ட பதிவானது பசுமை தாயகம் அமைப்பை சேர்ந்த அருள் ரத்தினம் அவர்களின் முகநூல் பதிவாகும்.