நாலா பக்கமும் வெள்ளம்.. மணல்திட்டில் மாட்டிக் கொண்ட வாயில்லா ஜீவன்கள்!

தருமபுரியில் காவிரி ஆற்றின் இடையே இருக்கும் தீவில் சிக்கியிருக்கும் 60-க்கும் மேற்பட்ட கால்நடைகளை மீட்டு தருமாறு தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் சொந்தமாக சில நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார்.

காவிரி ஆற்றில் நீரின் அளவு குறைந்து இருந்ததால், எப்பொழுது கால்நடைகளை, ஆற்றின் நடுப்பகுதியில் இருக்கும் தீவு ஒன்றில் மேய்ச்சலுக்கு அனுப்புவார்.

அவரின் கால்நடைகளுடன் சேர்த்து, அப்பகுதியை சேர்ந்த சிலரின் கால்நடைகளும் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.

விவசாயிகள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து 30 கிமீ தூரத்தில் மாடுகை மேயும் இடம் அமைந்திருப்பதால், அவ்வப்போது கால்நடைகளை பார்த்துவிட்டு சென்று விடுவார். பின்னர் மேய்ச்சல் முடிந்து கால்நடைகள் அவைகளாகவே வீடுகளுக்கு திரும்பி வந்துவிடும்.

இந்நிலையில் காவிரி ஆற்றில் வெளியேறி வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் நாலாபுறமும் நீர் சூழ்ந்திருக்க நடுவிலேயே சிக்கிக்கொண்டுள்ளன.

இதனையடுத்து அவற்றை மீட்க முயன்ற விவசாயிகள், பெரிய பரிசலில் சென்று கால்நடைகளின் கால்களை கட்டி கரைக்கு மீட்டு வந்தனர்.

ஆனால் நீரை பார்த்து கால்நடைகள் மிரண்டதால், 10 கால்நடைகளுக்கு மேல் மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நேரம் அதிகரிக்க அதிகரிக்க நீரின் அளவும் கூடுவதால், நீருக்கு நடுவில் சிக்கியுள்ள மற்ற கால்நடைகளுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அரசு விரைந்து மீட்பு நடவடிக்கைக்கு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.