மும்தாஜ் vs மஹத்… வெளியே போகப்போவது யாரு? (பிக்பாஸ் சீசன் 2 : 61ம் நாள்!!- வீடியோ)

ன்று மும்தாஜ் கார்னர் செய்யப்பட்ட தினம்’ என்று பிக்பாஸ் வீட்டின் சுவரில் பொறித்து வைக்கலாம்.

அந்த அளவுக்கு மும்தாஜ் மீதுள்ள மனக்குறைகளை பெரும்பாலோனோர் கொட்டித் தீர்த்தார்கள்.

குறிப்பாக மஹத் இதை ஆவேசமாகத் தொடங்கி வைக்க, அந்தத் தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு இன்னமும் அதிக ரணகளமாக ஆட்டம் ஆடினார் ஐஸ்வர்யா.

1_09243.png

உண்மையில் மஹத்தின் கோபம் என்னவென்றே புரியவில்லை. மெஜாரிட்டி அடிப்படையில் அவரது பெயர் சிறந்த பங்களிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது.

ஆனால், ‘தன்னைச் சிறந்த பங்களிப்பாளர்’ என்று மும்தாஜ் தனி உரையாடலில் சொல்லிக்கொண்டாரோ இல்லையோ, அதுதான் உண்மை என்கிற எளிய விஷயம் மஹத்தின் மரமண்டைக்கு உறைத்திருக்க வேண்டும்.

என்னமோ, நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டதுபோல, ‘ரத்தம் சிந்தினேன், 50 மணிநேரம் உழைத்தேன்’ என்றெல்லாம் அவர் தொடர்ந்து கூவுவது அபத்தமாக இருக்கிறது.

மஹத் மூர்க்கத்தனமாகச் செயல்பட்டு பொருள்களைப் பிடுங்கிக்கொடுத்தார் என்பதெல்லாம் உண்மைதான்.

ஆனால், ஒரு குழு கடுமையான உழைப்பால் மட்டும் வெற்றி பெறுவதில்லை. அந்தக் குழுவின் உழைப்பைச் சரியாக ஒருங்கிணைப்பதற்கு ஒரு சரியான தலைமை வேண்டும்.

‘Hard work’ஐவிட ‘Smart work’- தேவை எனும் காலகட்டத்தில் இருக்கிறோம். எதிரணியைச் சேர்ந்த பெண்களுடன் அவ்வப்போது வழிந்துகொண்டிருந்தது, அணிதுரோகம் செய்தது, தலைமையின் பேச்சைக் கேட்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டது, ஆபத்து நேரத்தில் மெத்தனமாக இருந்தது போன்ற காரணங்களுக்காக மஹத்தான் மோசமான பங்களிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இவருடன் மாரடித்த காரணத்துக்காகவே மும்தாஜுக்கு ஏதாவது சிறப்பு விருது தரலாம்.

சரியாகப் பங்கெடுக்காதவர்’ விருது சென்றாயனுக்கு தரப்பட்டதுகூட இவர்களுக்குப் பிரச்னையில்லை. மும்தாஜை திட்டித் தீர்ப்பதற்கு அந்தச் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொண்டார்கள்.

அவ்வளவே. போலீஸ் – திருடன் டாஸ்கிலும் ஏறத்தாழ இதேதான் நடந்தது. மும்தாஜின் ஆலோசனைகளைப் பல நேரங்களில் கேட்கத் தவறிய மஹத், டாஸ்க் முடிந்ததும் பல காரணங்களைச் சொல்லி அவர் மீது கோபப்பட்டுக்கொண்டிருந்தார்.

‘தையல் திறமை எனக்குக் இருந்தாலும் தைப்பதற்கான வாய்ப்பு தரப்படவில்லை’ என்று சென்றாயன் கூறியதை வைத்து அதையே பஞ்சாயத்து சபையிலும் மும்தாஜ் மீதான புகாராகக் கூறினார்கள்.

மும்தாஜ் இதற்காக சென்றாயனை பின்பு தனியாக விசாரித்தார். “நானா உங்களுக்குத் தைக்க வாய்ப்பு தரவில்லை.

பொம்மைகள் ரிஜக்ட் ஆகிவிடும் என்கிற பயத்தில் மஹத்தானே உன்னைத் தடுத்தார்? ஏன் இதை நீங்கள் சபையில் சொல்லவில்லை?” என்கிற கேள்விகளுக்கெல்லாம் சங்கடத்துடன் ஆமோதித்தார் சென்றாயன்.

மும்தாஜும் இந்த விஷயத்தைச் சபையிலேயே கேட்டிருக்கலாம். அப்போது அவருக்குத் தோன்றவில்லைபோல.

சென்றாயன் சில விதங்களில் பலியாடாக ஆக்கப்படுவது உண்மைதான். ஆனால், இது சார்ந்த தாழ்வு உணர்விலிருந்து அவர் வெளியே வந்து சம்பந்தப்பட்ட சூழலிலேயே புத்திசாலித்தனமாக வாதாட வேண்டும்.

மும்தாஜ் பல விதங்களில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மனிதர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பது மஹத்தின் புகாராக இருந்தால், ‘வலிமையானது எஞ்சும்’ என்கிற இந்த ஆட்டத்தின் விதியின்படி அது சிறப்பானதே. அதற்கேற்றவாறான எதிர் உத்திகளைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஆவேசமாக குதித்துக்கொண்டிருப்பதில் ஓர் உபயோகமும் இல்லை.

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவால் ‘பயன்படுத்தப்படுவது’ பற்றி மஹத்துக்கு எவ்வித பிரச்னையும் இல்லை போலிருக்கிறது.

மும்தாஜிடம் சில எதிர்மறையான அம்சங்கள் இருக்கின்றன. அவர் இந்த விளையாட்டில் சில உத்திகளைப் பயன்படுத்தவும்கூடும்.

ஆனால், ஏறத்தாழ இந்த வீட்டில் அனைவருமே இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் இந்த விளையாட்டில் அவர்கள் இத்தனை நாள்களாக நீடிக்கிறார்கள் என்பது எளிய உண்மை. எனவே, மும்தாஜை மட்டும் தனிமைப்படுத்தி குற்றம் சாட்டுவது முறையானதல்ல.

**

60-ம் நாளின் சம்பவங்கள் இரவிலும் தொடர்கின்றன. ‘வேண்டும்போது சிலரைப் பயன்படுத்திக்கொள்கிறார்’ என்று வெடித்த மஹத்தின் கோபம் இன்னமும் தணியவில்லை.

இந்த விஷயத்தையே பல்வேறு சொற்களின் வழியாகச் சொல்லிக்கொண்டேயிருந்தார். ஐஸ்வர்யாவும் தனது ஆவேசத்தின் வழியாக இதற்குச் சரியான பக்கவாத்தியமாக இருந்தார்.

சிறப்பாக நடைபெற்றது இந்தக் கச்சேரி. ‘உன்னை மும்தாஜ் நாமினேட் செய்யச் சொல்லி பலரிடம் சொல்லியிருக்கிறார்.

அவரைப் போய் நம்பிக்கொண்டிருக்கிறாயே” என்று மஹத், ஜனனியிடம் சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த மும்தாஜ், ‘எப்போது நான் அப்படிச் சொன்னேன்?” என்று ஒவ்வொருவரிடமாக வாக்குமூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.

பெரும்பாலோனோர் மறுக்க, யாஷிகா மட்டுமே ‘ஆம்’ என்றார். ஆனால், விசாரிக்கும்போது ‘யாரை நாமினேட் செய்யலாம்’ என்கிற குழப்பத்தில் யாஷிகா இருக்கும்போது, மும்தாஜ் அவருக்கு ஆலோசனை தந்து உதவியிருக்கிறார்.

அவ்வளவே. ‘நானாகச் சென்று மற்றவரிடம் ‘இவரை நாமினேட் செய்யச் சொல்லவில்லை’ என்கிற மும்தாஜின் கூற்று உண்மை என்று நிரூபிக்கப்பட்டது.

அப்போதும் வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார் மஹத். ஓர் உரையாடலை முதிர்ச்சியோடு நிகழ்த்தும் பக்குவம் மஹத்துக்கு இன்னமும் வரவில்லை.

“இப்போது சண்டை போட்டுக்கொண்டாலும் நாளையே யாஷிகா, ஐஸ்வர்யா மும்தாஜூடன் இணைந்துகொண்டாலும் ஆச்சர்யமில்லை.

பின்பு மஹத்தும் அந்தப் பக்கம் சாய்வார். அதன் பிறகு ஜனனியும் வைஷ்ணவியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை” என்று பிறகு சென்றாயன் தனியாகக் கூறிக்கொண்டிருந்ததை டேனியும் ஆமோதித்தார்.

இந்தச் சர்ச்சையில் தன்னுடைய பெயரும் அடிபட்டதை எண்ணி ஜனனி கலங்கிக்கொண்டிருந்தார்.

வைஷ்ணவி இவருக்கு ஆறுதல் கூறினார். ‘இங்க எல்லோருக்கும் டபுள் ரோல்’ என்கிற விஸ்வரூபம் வசனத்தை வேறு வார்த்தைகளில் புத்திமதியாகக் கூறினார் வைஷ்ணவி.

ஜனனியுடையது ‘முதலைக்கண்ணீர்’ என்று யாஷிகா கூற மஹத்தும் ஐஸ்வர்யாவும் சிரித்தார்கள்.

3_09023.png

தங்கள் நிகழ்ச்சி ஸ்பான்ஸர்களின் விளம்பரங்களைப் பல்வேறு வகையில் இங்கு நுழைப்பது பிக்பாஸின் வழக்கமான பணி மற்றும் பாணி. அந்த வகையில் இன்னொரு டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்தது.

‘நாளை காலை பாடல் முடிந்ததும் தண்ணீர் சிறிது நேரத்துக்கு மட்டுமே விநியோகிக்கப்படும்.

அதற்குள் தங்கள் பணிகளை முடித்துக்கொள்ள வேண்டிய மக்கள், 10 பக்கெட் நீரையும் சேமித்துக்கொள்ள வேண்டும். அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.’

விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, ‘தாம் ஒருவரிடம் எப்படி பழகுகிறோம்’ என்பது குறித்து மும்தாஜூம் ஜனனியும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘ஒருவர் என்னிடம் எப்படி நடந்து கொள்கிறாரோ, அதே வகையில்தான் நானும் பழகுவேன்” என்று ஜனனி சொல்ல ‘நான் ஒருவரிடம் அன்பு செலுத்துகிறேன் என்றால், அந்தச் சமயத்தில் அதற்கு உண்மையாகத்தான் இருப்பேன்” என்று மும்தாஜ் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.

‘மஹத் கோபக்காரன். ஆனால் போலி கிடையாது. அவன் மற்றவர்களின் செல்வாக்கால் செலுத்தப்படுகிறான்’ என்கிற கணிப்பை ஜனனி சொல்ல ‘இந்த ஒரு விஷயத்தில் அப்படி கிடையாது.

ஐஸ்வர்யா விஷத்தைக் கக்குகிறாள். மஹத் மரியாதையின்றி பேசுகிறான். ஒருவர் தங்கமானவராகவே இருந்தால்கூட மரியாதையின்றி பேசும் நபர் எனக்குத் தேவையில்லை.

இந்த விஷயத்தில் சென்றாயனே பரவாயில்லை’ என்று மும்தாஜ் சொல்லிக்கொண்டிருந்தார்.

61-ம் நாள் காலை. ‘நான் யாரு… நான் யாரு… நான் ராஜா’ என்ற சூழலுக்கு பொருத்தமான பாடல் ஒலிபரப்பானது.

ஒவ்வொருவருமே தங்களை ராஜாவாக நினைத்துக்கொள்வதுதான் பிரச்னை. ஸ்டோர் ரூம் பெல் அடிக்க உள்ளே சென்று பார்த்ததில் 10 காலி பக்கெட்டுக்கள் இருந்தன.

போட்டியாளர்கள் வெள்ளை நிற உடையில் அமர்ந்திருக்க போட்டியின் விவரம் அறிவிக்கப்பட்டது. வீடு இரண்டு அணிகளாகப் பிரிய வேண்டும்.

தலா ஐந்து பக்கெட் நீரை வைத்துக்கொண்டு தரப்பட்டிருக்கும் அழுக்குத் துணிகளையும் பாத்திரங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். எந்த அணி சுத்தமாக வேலை செய்து, தண்ணீரையும் அதிகம் சேமித்திருக்கிறதோ, அதுவே வெற்றி பெற்ற அணி.