கொக்குவில் சம்பியன் லேனில் மருத்துவர் ஒருவரது வீட்டை, உந்துருளியில் முகங்களை மூடிக்கட்டிக் கொண்டு வந்த குழுவினர் தாக்கியுள்ளனர். வீட்டிலிருந்த பொருள்கள், கண்ணாடிகள் அந்தக் குழுவினரால் உடைக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .யாழ்ப்பாணத்தில் குறித்த சில பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றுமாலை கொக்குவிலில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பியன் லேனில் மருத்துவர் ஒருவர் வாடகைக்குத் தங்கியுள்ளார். அவரது வீட்டுக்கு 3 உந்துருளியில் வந்த இனந்தெரியாத குழுவினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
4 பேர் வரையில் வீதியில் நிற்க இருவர் வீட்டின் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியதாக அயலவர்கள் குறிப்பிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.