இளைஞர் குழுவொன்றின் ரௌடித்தனத்தில் இருந்து மருமகனை காப்பாற்ற முயன்ற மாமனார் நேற்று கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (18) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றது. காரைநகர் கருங்காலி வீதியை சேர்ந்த நடராஜா தேவராஜா (54) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் வேலை முடித்து உயிரிழந்தவரின மருமகன் உந்துருளியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரைநகர் புதுவீதி சந்தி பகுதியில் பட்டா ரக வாகனத்தில் இளைஞர் குழுவொன்று நின்றிருந்தது.
உந்துருளியில் வந்தவர் ஹெட் லைட்டை நிறுத்தி, டிம் லைட்டை ஒளிரவிடவில்லையென கோபப்பட்ட இளைஞர்குழு, உந்துருளியில் வந்த மருமகனை மறித்து முரண்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவரை தாக்க முயன்றனர். அவர் உந்துருளியில் தப்பி சென்றார்.
புதுவீதி சந்தியிலிருந்து அண்ணளவாக 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வீடுவரை அவரை பட்டா வாகனத்தில் இளைஞர் குழு கலைத்து சென்றது.
வீட்டு வாசலில் வைத்து உந்துருளியில் வந்தவரை தலைக்கவசத்தால் தாக்கினர் பட்டா வாகனத்தில் வந்தவர்கள். முரண்பாடு நடந்து கொண்டிருந்தபோது, உயிரிழந்த தேவராசா வீட்டுக்கு வந்துள்ளார். மருமகன் தாக்கப்படுவதை அவதானித்தவர், இளைஞர் குழுவை சமரப்படுத்த முயற்சித்தார்.
இளைஞர்கள் அவரை வேகமாக நிலத்தில் தள்ளி விழுத்தியுள்ளனர். அவர் பிடரி அடிபட நிலத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.
9.15 மணியளவில் காரைநகர் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்பட்டது. அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனையில் உயிரிழந்தவருக்கு மாரடைப்பு இருந்ததும், கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சியில் உயிரிழந்திருக்கலாமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது உடலில் அடி காயங்கள் எதுவுமில்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டா வாகனத்தில் வந்து ரௌடித்தனத்தில் ஈடுபட்ட ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.