முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பாக, சட்ட மா அதிபரிடம் சபாநாயகர் ஆலோசனை கோரியிருந்தார்.
இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம், தமது ஆலோசனையை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு அனுப்பியுள்ளது.
அதில், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு அழைப்பு விடுத்த விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக, நிலையியல் கட்டளை விதிமுறைகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிகழ்வு ஒன்றில் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளையும் தமது திணைக்களம் ஆய்வு செய்தது என்றும் சபாநாயகருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இதுபற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு தமது அறிக்கையை காவல்துறை மா அதிபரிடம் கையளித்திருந்தது. அவர் அதனை சட்டமா அதிபருக்கும் அனுப்பியிருந்தார்.
இந்த அறிக்கையை மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் தலைமையிலான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவாளர் குழு கவனமாக ஆராய்ந்த பின்னர், தமது பரிந்துரைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்தனர் என்றும் சட்டமா அதிபர் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.