கேரளா மாநிலம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் ஜேர்மனியில் சுற்றுலா மேற்கொண்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினை சந்தித்துள்ளது கேரளா மாநிலம். இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வாழ்விடங்களை இழந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
உண்ண உணவு கூட இல்லாமல் தவித்து வரும் அவர்களுக்கு, அண்டை மாநிலங்களின் உதவியால் போக்குவரத்து வாகனங்களின் மூலம் உணவுகள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையிலிருந்து கேரளா மீள்வதற்கு அதிகபட்ச நாட்கள் கூட ஆகலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவின் வனத்துறை அமைச்சர் ராஜு, ஜேர்மனியில் நடைபெறும் சர்வதேச மலையாளிகள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.
உடல்நிலை குறைபாட்டால் அமெரிக்கா செல்லவிருந்த முதல்வர் பினராயி விஜயன் திடீர் வெள்ளத்தால் மாநிலத்திலேயே தங்கியிருக்கும் போது, அமைச்சரின் இத்தகைய செயல் பொதுமக்கள் மத்தியின் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காரணங்களால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாக, அரசியல் பிரமுகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது அவர் உடனடியாக நிகழ்ச்சியை ரத்து செய்து கேரளா திரும்ப முடிவெடுத்திருப்பதாக அவரின் தனிச்செயலாளர் தெரிவித்துள்ளார்