யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படும் விவகாரம் நேற்று யாழ் மாநகரசபை அமர்வில் வெளிச்சத்திற்கு வந்தது. ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படுவதை யாழ் மாநகரசபை ஆணையாளரும் உறுதிசெய்துள்ளார்.
யாழ் மாநகரசபையின் நேற்றைய அமர்வில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலையின் உயிரியல் கழிவுகளை அகற்றும் பொறுப்பு தனியார் நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் உயிரியல் கழிவுகளை சுத்தம் செய்யாமல் நேரடியாக கடலுக்குள் கொட்டுகிறது. இது மிக ஆபத்தானது. கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், கடற்றொழிலாளர்களும் ஆபத்தை எதிர்கொள்வார்கள்.
கழிவகற்றலிற்காக இந்த நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் பெருந்தொகை பணம் வழங்குகிறது. ஆனால் நிறுவனம் தனது பணியை சரியாக செய்யாமல், யாழ் சிறைச்சாலைக்கு அருகான பகுதி ஊடாக கழிவுகள் கடலுக்குள் கொட்டப்படுகின்றன.
இந்த விவகாரம் உண்மையானது என யாழ் மாநகரசபை ஆணையாளரும் நேற்று குறிப்பிட்டார். எனினும், இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கும் சட்டவலு இல்லாததால் தலையிட முடியாதுள்ளதாக ஆணையாளர் நேற்று குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மருத்துவமனை பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதென நேற்று தீர்மானிக்கப்பட்டது.