அதிகாலை விழிப்பவரா நீங்கள்… நிச்சயம் நேர்மறையான மனிதர் தான்!

நேரமே போதமாட்டேங்குது… கூடுதலா கொஞ்சம் நேரம் கிடைச்சா நல்லது’  என்று சிலர் புலம்பக் கேட்கலாம். ஆனால், அவர்களது புலம்பலுக்கானத் தீர்வு வெகு அருகிலேயே இருக்கிறது. அதிகாலை விழித்தெழுதல்.  அதிகாலை விழித்தெழுவதன் மூலம், ‘நாம் தேடும் அந்த கூடுதல் காலம் இலவசமாகக் கிடைக்கும்.  கூடவே, உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளையும் கொடுக்கும்’ என்கிறது மருத்துவ அறிவியல்.

தூக்கம்

கனவல்ல நிஜம்:

’சோர்வின்றி கண் விழிக்கிறோம்… சூரியன் மெல்ல உதிப்பதை ரசிக்கிறோம்… பறவைகளின் குரல் ஒலிகள் நம்மைப் பரவசப்படுத்துகின்றன. அதிகாலையின் குளுமையும், தூய்மையான காற்றும் மனதை உற்சாகப்படுத்துகின்றன. அதிகாலை தரும் தனிமை, அந்த நாளுக்கான திட்டத்தை வடிவமைக்க துணையாயிருக்கிறது…’ இப்படிப்பட்ட சூழல் ஏதோ கனவுலகத்தில் உணரப்படுவது அல்ல… அதிகாலையில் கண்விழிப்பதால் நாம் உணரக்கூடிய அற்புதமான சூழல்!

என்ணங்களை நிர்ணயிக்கும் அதிகாலை:

சூரியன் உதிக்கும்போது கண்விழிப்பதும், சூரியன் மறைந்ததும் தூக்க உணர்வு ஏற்படுவதும், நமது மரபணுக்களில் பதிந்து தொடர்ச்சியாய் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுழற்சி. இதுவே நமது உடலின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணியாக இருக்கும் ‘சர்காடியன் ரிதம்’ (Circadian rhythm), முறைப்படி நடப்பதற்கான அடிப்படையும் கூட. சர்காடியன் சுழற்சி முறையாக இருந்தால், நேர்மறை எண்ணங்கள் (Positive thinking) அதிகரிக்கும் என்கிறது ஆய்வு. உறக்கத்தை முழுமையாக அனுபவித்து, அதிகாலையில் விழிப்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம்.

மனச்சோர்வு

தாமதமாக எழுபவர்களுக்கு மனச்சோர்வு (Depression) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பலமடங்கு அதிகரிக்கிறதாம். அதிகாலையில் கண்விழிப்பவர்களுக்கு முடிவு எடுக்கும் திறன் (Decision making capacity) சிறப்பாக இருக்கும். உடலில் ஹார்மோன்களின் செயல்பாடுகளும் சீராக நடைபெறும். மாணவர்களின் அறிவாற்றலும் பெருகும். மன அழுத்தம் குறையும்… என அதிகாலை விழிப்பதன் நன்மைகளைப் பற்றி எடுத்துரைக்கின்றன ஆய்வுகள். அதிகாலையில் எழுபவர்கள், கூடுதல் ஆற்றலுடனும் புத்துணர்வுடனும் செயல்படுவதாகவும், நீண்ட நாள்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் உறக்கம் சார்ந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

மேற்சொன்ன ஆய்வு முடிவுகளை, ‘புத்தி யதற்குப் பொருந்து தெளிவிக்கும்…’ எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விளக்கியிருக்கிறது. மனம் சார்ந்த செயல்பாடுகள் (புத்தி) அனைத்தும் மேம்படும். உடலுக்குள் நடக்கும் சூக்கும இயக்கங்கள் (ஹார்மோன் சுரப்பு, விழிப்பு-உறக்க சுழற்சி) முறைப்படுத்தப்படும் என பல விஷயங்களைப் பேசுகிறது இந்தப் பாடல்.

என்ன செய்யலாம்: காலையில் பறவைகளின் குரல்கள் நம்மைத் தட்டி எழுப்பும்படி ஜன்னல்களில் கட்டப்பட்டிருக்கும் துணியை (ஸ்கிரீன்), சற்று விலக்கி வைக்கலாம். பெற்றோர்களும் அதிகாலையிலேயே எழுந்து குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பது அவசியம். இரவு பத்து மணிக்கு முன்பாக  உறங்கச் செல்வது முக்கியம். வயதைப் பொறுத்து சுமார் 7 – 8 மணிநேர உறக்கமும் தேவைப்படுகிறது. சரியாக உறங்காமல், அதிகாலையில் எழுவதால் முழு பலனையும் அடைய முடியாது. ஒரு முறை அலாரம் அடித்ததும் எழுவது நல்லது. ’ஸ்னூஸ்’ (Snooze) செய்துகொண்டே இருந்தால், உறக்கமும் முழுமையடையாது; சோர்வே மிஞ்சும்.

அதிகாலை

அதிகாலையில் எழுவது தொடக்கத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், அதன் பலன்களை உணர்ந்தபின்,  வழக்கமாகிவிடும். செடென்டரி வாழ்க்கை முறையில் (Sedentary Life style) பயணித்துக்கொண்டிருக்கும் நமக்கு, அவசியமாக இருக்கும் உடற்பயிற்சிக்கு நேரம் கிடைக்கும். அனைத்து செயல்களிலும் பரபரப்பைக் காட்ட வேண்டிய அவசியமிருக்காது. தாமதமாக விழிக்கும்போது, உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும் காலை உணவையும் தவிர்க்க வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சூரிய உதயத்துக்கு முன் எழும் பழக்கம் குறைந்ததால்… விடியற்காலையில் `கொக்கரக்கோ’ என்று கூவி, `விழித்துக்கொள் மனிதனே’ என தலை சிலுப்பிய சேவல்கள் கொக்கரிக்க மறந்துவிட்டன. அதிகாலையில் கானம் பாடிய குயில்கள், தங்கள் தொழிலை கைவிட்டுவிட்டன. விரைவாக எழுந்து, மலர்கள் மெலிதாக மொட்டவிழ்க்கும் அதியசத்தை ரசித்த ரசிகனின் ரசனையும் ருசியற்றுப் போய்விட்டது. சூரியன் உதிக்கும்போது ஆரவாரம் செய்த சிறுவர்களின் கூட்டங்களும் உறங்கிக் கொண்டே இருக்கின்றன, அதிகரித்த சுமை காரணமாக! இயற்கை அளித்த வரங்களை மீண்டும் மனமுவந்து ஏற்றுக்கொள்வோம், அதிகாலையில் இமைகளைக் கட்டவிழ்த்து!

நாம் பின்பற்றி வந்த ஆரோக்கியமான பழக்கங்களை கைவிட்டு, நமது உடலில் நடைபெறும் பல சூக்கும செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டைப் போடத் தொடங்கிவிட்டோம். இனி விழித்துக்கொள்வோம். பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட அதிகாலையில் உறக்கம் கலைக்கும் விதியைக் கடைப்பிடிப்போம். ’பழகப் பழகப் புளிக்காமல் இனிக்கும் விஷயம் அதிகாலையில் கண்விழிப்பது!’ இனிக்க இனிக்க பழகுவோம்… அதிகாலை தரும் இனிமையைச் சுவைப்போம்!