முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் தமிழ் மக்களின் பூர்வீகக் கிராமமான கருநாட்டுக்கேணியில் உள்ள அரச காணிகளின் ஒரு பகுதி சிங்கள மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகாவலி அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் வடக்கின் நிலப்பரப்பு உள்ளடக்கப்பட்டால், அது சிங்கள குடியேற்றத்திற்கு வழியேற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டு வந்ததன்படியே அனைத்தும் நிகழ்ந்துள்ளது. மகாவலி அதிகாரசபையின் ஊடாகவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கருநாட்டுக்கேணி கிராமம் முழுமையாக தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் கிராமமாகும்.
1984ஆம் ஆண்டில் இந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், அரச படைகளால் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் மீண்டும் 2010ஆம் ஆண்டில் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தக் காலப்பகுதிகளில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த சிங்கள மீனவர்கள், தமிழ் மீனவர்களின் பாரம்பரிய கரைவலைப்பாடுகளை அத்துமீறி கைப்பற்றி மீன்பிடியில் ஈடுபட்டனர்.
இவர்கள் கடற்கரையோரக் காணிகளை அத்துமீறிப் பிடித்து நிரந்தரமான சொகுசு வீடுகளையும் அமைத்து வந்தனர். இவ்வாறு கருநாட்டுகேணியில் கடற்கரையோரத்தை அத்துமீறி கைப்பற்றிய மிதுகுலசூரிய துசார லிவேறா, சலினா மேரியன் தேதனு டயஸ் ஆகியோருக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழங்குத்தாக்கல் செய்ததன் அடிப்படையில் அவர்களை இவ் அரச காணிகளிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றால் கட்டளை இடப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து சிங்கள மீனவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்தனர். எனினும் அவர்களின் கோரிக்கை நியாமற்றதும் சட்டரீதியானது அல்ல எனவும் குறிப்பிட்டு உயர் நீதிமன்றால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றில் கட்டளையை ஆட்சேபித்து அதனை மறு ஆய்வுக்குட்படுத்தக் கோரி, மிதுகுலசூரிய துசார லிவேறா, சலினா மேரியன் தேதனு டயஸ் ஆகியோர் வவுனியா மேல் நீதிமன்றில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர் .
அந்த மனுக்கள் மீதான விசாரணையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்காக சட்டமா அதிபரின் பிரதிநிதியான அரச சட்டவாதி முன்னிலையானார்.
இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் மிதுகுலசூரிய துசார லிவேறா, சலினா மேரியன் தேதனு டயஸ் ஆகியோருக்கு காணியிலிருந்து வெளியேறும் உத்தரவு வலுவிலுள்ள நிலையில் மேற்படி காணிகளுக்கு மகாவலி அதிகார சபையினால் காணி உத்தரவுப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை நீதிமன்றத்தில் அவர்கள் சமர்ப்பித்து, சட்டரீதியாகவே அங்கு குடியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மகாவலி அதிகாரசபைக்குட்பட்ட நிலத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற பிரதேச செயலாளருக்கு அதிகாரம் கிடையாது என்றும் மகாவலி அதிகாரசபை நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
விவசாயத்துடன் தொடர்புடைய மகாவலி அதிகாரசபை, மீன்பிடி விவகாரத்தில் எப்படி அனுமதி வழங்கலாமென்பது பெரிய கேள்வி.
இவர்கள் தவிர இன்னும் சில சிங்கள மீனவர்களுக்கும் காணிகளுக்கான உத்தரவுப்பத்திரங்கள் மகாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டுள்ளன.