இந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் தன் கையில் இருந்த 4 வயது குழந்தையை ஆற்றுக்குள் தவறவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர், என்.சி.சி.நகரை சேர்ந்தவர் பாபு. இவரது 4 வயது மகனான தன்வந்த் ஒரு தனியார் பாலர் பாடசாலையில் படித்து வந்தான்.
காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தை பார்ப்பதற்காக பாபு, மனைவி சோபா மற்றும் மகன் தன்வந்த் ஆகியோருடன் காரில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வாங்கல் ஆற்று பாலத்திற்கு இன்று காலை 9.30 மணிக்கு சென்றுள்ளார்.
காரை ஓரமாக நிறுத்தி விட்டு வாங்கல் ஆற்று பாலத்தில் நின்று வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடுவதை பார்த்து மகிழ்ந்தனர்.
கரை புரண்டும் ஓடும் வெள்ளத்தை செல்பி எடுப்பதற்கு ஆசைப்பட்டனர். இதற்காக பாபு, பாலத்தின் தடுப்பு சுவர் ஓரத்தில் நின்று மகனை ஒரு கையில் தூக்கி பிடித்துக் கொண்டு. மற்றொரு கையில் கையடக்க தொலைபேசியை வைத்துக் கொண்டு செல்பி எடுத்தார்.
அப்போது குழந்தை தன்வந்த் திடீரென திமிறினான். இதனால் நிலை தடுமாறிய பாபு கையில் இருந்த குழந்தையை விட்டு விட்டார். உடனே குழந்தை ஆற்றில் விழுந்தது.
இதை பார்த்த பாபு மற்றும் சோபா கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அய்யோ குழந்தை ஆற்றில் விழுந்து விட்டது. யாராவது வந்து காப்பாற்றுங்கள்… என்று கதறினர். தங்கள் முன்பு குழந்தையை வெள்ளம் இழுத்து செல்வதை கண்டு துடித்தனர்.
அங்கிருந்தவர்களிடம் யாராவது குழந்தையை காப்பாற்றுங்கள் என கெஞ்சினார்கள். ஆனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் ஆற்றில் குதிக்க முன்வரவில்லை. தாய் சோபா அதிர்ச்சியில் உறைந்தார்.
பொலிஸார் மற்றும், தீயணைப்பு வீரர்கள் படகு மற்றும் பரிசல்கள் மூலம் குழந்தையை தேடி வருகிறனர்.