யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் உள்ள கேக் விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து மாவா போதைப்பொருள் மீண்டும் கைப்பற்றப்பட்டது. அவற்றை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கேக் விற்பனை நிலைத்தில் இருந்து முன்னரும் இரு தடவைகள் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்படும் நிலையில் மூன்றாவது தடவையாகவும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
”பாடசாலை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மாவை போதைப் பாக்கு விற்பனை செய்யப்படுகின்றது என்று வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதையடுத்து நேற்று ஐந்து சந்தியில் உள்ள கேக் விற்பனை நிலையம் விசேட பொலிஸ் பிரிவால் கேக் விற்பனை விலையம் முற்றுகையிடப்பட்டது.அங்கு 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட நிலையில் ஒரு கிலோ மாவாப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவற்றை விற்பதற்கு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடை உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டார்.
முன்னரும் கைது
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் கேக் விற்பனை நிலையம் என்ற பெயரில் இயங்கிய மாவா விற்பனை நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட்டது. வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ பணிப்புக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வியாபார நிலையத்தில் கடமையாற்றிய 3 பேரும், மாவாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
யாழ். குடாநாட்டுக்கு மாவா போதைப் பொருளை வழங்கும் பிரதான சந்தேநபர் புத்தளத்தில் உள்ளார் என்றும், அவரையும் ஏனைய சிலரையும் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் அப்போது மன்றுக்குத் தெரிவித்திருந்தனர்.
கடந்த 7ஆம் திகதியும் ஐந்துசந்தியில் உள்ள கேக் விற்பனை நிலையத்தில் பெருந்தொகை மாவா போதைப் பாக்குக் கைப்பற்றப்பட்டிருந்தது. அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மக்கள் விசனம்
யாழ். ஐந்துசந்திப் பகுதியில் கேக் விற்பனை நிலையத்தில் இருந்து போதைப் பொருள்கள் கைப்பற்றப்படுவது வழமையான செயற்பாடாகியுள்ளது. பொலிஸாரால் கைதுகள் நடைபெறும் நிலையில் தொடர்ச்சியாக அங்கு போதைப்பொருள் விற்பனை நடைபெறுவது எவ்வாறு என்று பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கைதுகளின் பின்னரும் அச்சமின்றிப் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதால் இதற்குப் பின்புலப் பாதுகாப்பு இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்றும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.