யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி..!!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மயிலிட்டி துறைமுகத்திற்கு சென்றுள்ளார்.205 மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்படும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளை இதன்போது ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் மீன்பிடி உற்பத்தியில்மயிலிட்டி துறைமுகம் 3 இல் ஒரு பங்கு பங்களிப்பு செய்துள்ளது.அந்த வகையில், இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்திக்கான அடிக்கல்லினை ஜனாதிபதி நாட்டி வைத்ததுடன், பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.

மேலும், குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன், சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, வடமாகாண ஆளுநர், முப்படைகள் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.எனினும், ஜனாதிபதி கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

மேலும், யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம், மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் கடந்த வருடம் ஜூலை மாதம் 3ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.