ஆராதனா குரலில் ‘வாயாடி பெத்த புள்ள’.. சிவகார்த்திகேயனுக்கு டபுள் ட்ரீட்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவர உள்ள ‘கனா’ படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் செல்ல மகள் ஆராதனா பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

கனா
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள படம் ‘கனா’. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.  ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் நாளை (ஆகஸ்ட்  23) ’கனா’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் மகள்
இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். படத்தில் வரும் `வாயாடி பெத்த புள்ள..’ என்ற பாடலை சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடியுள்ளார். இந்த பாடல், தந்தை – மகள் இடையேயான அன்பை உணர்த்தும் பாடலாகவும், கதாநாயகியின் சிறிய வயது நிகழ்வுகளைக் காட்டும் பாடலாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இந்தப் படம் முழுக்க முழுக்க பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, `கனா’ படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடவுள்ளார்.

இந்த படத்தின் மற்றொரு ஹைலைட், இயக்குநர் அருண்ராஜா காமராஜும், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பர்கள்!