ஆசிய போட்டிகளில் ‘டங்கல் நாயகியான’ இந்தியாவின் வினேஷ் போகாட் பெண்கள் மல்யுத்தத்தில் தங்கம் வென்றார்.
பெண்கள் மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகாத், ஜப்பானின் யூகி ஐரீயை எதிர்கொண்டார். இதில் 6-2 என்ற கணக்கில் வினேஷ் போகாட் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் ஆசிய விளையாடுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை வினேஷ் போகாட் பெற்றுள்ளார்.
டங்கல் திரைப்படமானது போகாட் குடும்பத்தை மையமாகவைத்தே எடுக்கப்பட்டது. அதன்படி டங்கல் நாயகியாக கருதப்படும் 23 வயதாகும் வினேஷ் போகாட் தற்போது தங்கம் வென்று சாதித்துள்ளார்.
இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 45 நாடுகள் பங்கேற்று போட்டியிட்டு வருகின்றன.
இத் தொடரில் இலங்கை அணி சார்பில் மொத்தமாக 175 வீர,வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். ஆனாலும் தொடரில் இலங்கை அணி இன்னும் ஒரு பதக்கத்தையேனும் வெல்லவில்லை.
அதேவேளை தொடரின் மூன்றாம் நாளான நேற்றுக் காலை நடைபெற்ற நீச்சல் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 50 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சலில் கலந்துகொண்ட இலங்கை வீரர்களான மெத்தியூ அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க சகோதரர்கள் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
நேற்றுக் காலை நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்தியூ அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் ஆறாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட மெத்தியூ அபேசிங்க, 22.88 வினாடிகளில் போட்டித் தூரத்தை கடந்து 5ஆவது இடத்தையே பிடித்தார்.
இதேநேரம், 50 மீற்றர் சாதாரண நீச்சலின் ஏழாவது தகுதிகாண் சுற்றில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட கைல் அபேசிங்க, போட்டியை 23.36 வினாடிகளில் நீந்தி 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, 51 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 12ஆவது மற்றும் 20 ஆவது இடங்களைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பைத் தவறவிட்டனர்.