குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஜோதிடத்தில் அதிகம் உபயோகிக்கப்படும் வாக்கு.எந்தக் கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தை குரு பார்க்க நேரிட்டால், அந்த கெட்ட தோஷம் அடியோடு விலகிவிடும். நவக்கிரகங்களில் மேலான வலு பெற்று விளங்குபவர் குரு பகவான். அரசன் என்றும், ஆசான் என்றும் வர்ணிக்கப்படும் குரு பகவான், பிரம்மாவின் பேரன் என்று புராணம் கூறுகிறது. குரு பலம் தான் திருமணம் போன்ற மங்களகரமான காரியங்களுக்கு அடிப்படை. இந்த குருவும், கேதுவும் இணைந்து ஒருவர் ஜாதகத்தில் அமைந்திருந்தால், அந்த ஜாதகர் பாக்கியசாலியாக திகழ்வார். மேலும் அந்த நபர் என்றாவது ஒருநாள் கோடீஸ்வரராக விளங்குவார் என்கிறது ஜோதிடம்.
ரிஷபம் லக்னமாக அமைந்து, பாக்கிய ஸ்தானமான 5-ம் வீட்டில், அதாவது கன்னி ராசியில் குருவும், கேதுவும் இணைந்திருந்தால், அந்த ஜாதகர் கோடீஸ்வரராவது உறுதி. குருவுக்கு இது மிகுந்த பலமான இடமாகும். இந்த யோகம் அமைந்த ஜாதகர், 45 வயதுக்கு மேல் பெரிய பதவி வகித்துக் கொண்டிருப்பார். ஒருவரின் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு உத்தரவாதம் அளிக்கும் இடம் இது.
இனி கைரேகை சாஸ்திரப்படி கோடீஸ்வர யோகம் யாருக்கு அமையும் என்பதைப் பார்க்கலாம். நடுவிரல் என்றும், சனி விரல் என்றும் அழைக்கப்படும் விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருப்பது சனி மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்த சனி விரலின் கீழ் காணப்படும் வட்டத்துக்கு ‘சனி வளையம்’ என்று பெயர். ஒருவரின் கையில் நடுவிரலில் சனி வளையம் அமைந்து, அந்த வளையத்தில் இருந்து சிறு ரேகைகள் மேல் நோக்கிச் செல்ல, அதே சமயம் விதி ரேகை என்னும் ரேகை கங்கண ரேகையில் இருந்து எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல் நேராக சனி விரலை தொட்டு நின்றாலோ அல்லது சனி மேட்டில் முட்டி நின்றாலோ அதை ‘கோடீஸ்வர யோகம்’ என்கிறது கைரேகை சாஸ்திரம்.
இந்த அமைப்பு எல்லோர் கையிலும் அமைய வாய்ப்பில்லை. அபூர்வமாக ஒரு சிலருக்கே இந்த யோகம் அமைகிறது. இவ்விதம் ரேகை அமைந்தவர்கள் கோடீஸ்வரராக மாறுவது நிச்சயம்