கேரளாவில் இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு பெரிய மழை பெய்துள்ளது. இதனால் கடந்த ஒருவாரமாக பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு அரசின் சார்பில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும் லட்சக்கணக்கில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார்கள். சுமார் 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதுமுள்ள மக்கள் கேரளா கனமழை – வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டுவர பல்வேறு முறைகளில் உதவி வருகின்றனர். அந்த வகையில், போரால் பாதிக்கப்பட்டு தம் சொந்த தேசத்தை விடுத்து அன்னைத்தமிழகத்தில் அகதி முகாம்களில் வசித்துவரக்கூடிய ஈழத்தமிழ் மக்களும் தங்களாலான உதவிகளை கேரள மக்களுக்கு செய்துவருகின்றனர்.
எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியிலும் மாந்தநேய உணர்வுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் ஈழத்தமிழ் மக்களை அனைத்து தரப்பினரும் நெஞ்சார பாராட்டுகின்றனர்.