கண்டி புஸ்பதான மாவத்தையிலுள்ள இரு மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயர் குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றுடன் மற்றும் சில ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட பொலிஸ் அதிரடிப்படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிகள் மூன்றும், அதற்கான ரவைகளும் வாள் மற்றும் போலியான வாகன இலக்கத்தகடுகள், கைதிகளுக்குப் போடப்படும் கைவிலங்கு சோடி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி துப்பாக்கிகளில் ‘ரிபிடர் கண்’ வகையைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றும் பிஸ்டல் வகை கைத்துப்பாக்கி ஒன்றும் ரிவோல்வர் ஒன்றும் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிஸ்டலில் ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’ என்று தமிழில் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ரிவோல்வருக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 25, ‘ரிபிடர்’ துப்பாக்கிக்கான ரவைகள் 13, போலி வாகன இலக்கத் தகடு 6 , கஞ்சா போதைப் பொருள் மற்றும் கைவிலங்கு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
வீட்டு உடைமையாளர் அரசியல்வாதி ஒருவருடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்ககப்படுகிறது.
சந்தேக நபரும் அவரது மகனும் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுனள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம் மேற்படி வீட்டுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதி நவீன உயர் வலுக்கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் முற்றுகையின் போது வீட்டிலிருந்த ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறுபேர் சிங்களவர்கள் என்றும் ஒருவர் தமிழர் என்றும் தெரியவருகிறது.
கைதுசெய்யப்பட்டவர்கள் பன்வில, பேராதனை, குருநாகல் முதலான இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பிரதான சந்தேக நபர் ஏற்கனவே சில குற்றங்களுக்காக தேடப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட ஒருவர் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விசேட பொலிஸ் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் மற்றும் மத்திய பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபர் டி.ஆர்.எல். ரணவீர ஆகியோரின் வழிகாட்டலில் மேற்படி முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்ததனர்.
பாரியதொரு சம்பவத்தை மேற்கொள்வதற்கு இவர்கள் இவ்வாறு மேற்படி வீட்டில் தங்கி இருக்கலாமென்ற கோணத்தில் விசாரணைகள் நடை பெறுவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் எவ்வாறு கிடைத்துள்ளது என்பது பற்றியும் பொலிசார் விசாரணைகளை முன் எடுத்துள்ளனர்.