‘அறிவாலயத்தைக் கைப்பற்ற ஐம்பதாயிரம் பேரா?’

‘ஒரு பக்கம் தண்ணீர் பெருக்கெடுக்கிறது… மறுபக்கம் கண்ணீர் பெருக்கெடுக்கிறது’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார்.

“என்ன கேரளாவை நினைத்துக் கண்ணீர் வடிக்கின்றீரோ..?’’ என்று கேட்டோம்.

“நான் சொல்ல வருவது, காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீர் காவியம். இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு பெருக்கெடுத்துள்ளது காவிரி.

ஆனால், மொத்த நீரையும் முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் திறந்துவிட்டு, கடலில் கொண்டுபோய் சேர்த்துவிட்டது அ.தி.மு.க அரசு. காவிரியின் தென் கரைப் பகுதியில் உள்ள முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பூதலூர், செங்கிப்பட்டி, பேராவூரணி என்று பல ஊர்களிலும் இதுதான் நிலை. கிளையாறுகள், கால்வாய்கள், குளங்கள் என எதையுமே தூர்வாரவில்லை. தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால், அதுவாகவே ஓரளவுக்கு வழியை ஏற்படுத்திக்கொண்டு ஓடியிருக்கும். அதையும் செய்யவில்லை.’’

p2_1534852927  ‘அறிவாலயத்தைக் கைப்பற்ற ஐம்பதாயிரம் பேரா?’ p2 1534852927“கீழ்மட்ட அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லையோ?’’

“ம்க்கும்… மேலிடத்தில் இருப்பவர்களிடமே ஒருங்கிணைப்பு இல்லை. ‘கடைமடை வரை தண்ணீர் சேர்ந்துவிட்டது. இந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்’ என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் சொல்ல, அதேநாளில் இன்னொரு ஊரில் நின்றுகொண்டு, ‘கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் போய்ச் சேர்வதை உறுதிப்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளோம்.

விரைவில் கடைமடைக்கு தண்ணீர் போய்ச் சேர்ந்துவிடும்’ என்கிறார் முதல்வர் ஈ.பி.எஸ். இந்த லட்சணத்தில் கீழ்மட்ட அதிகாரிகளை என்னவென்று சொல்வது?’’

“ம்… தமிழகத்தின் தலையெழுத்து’’ என்றபடியே, அறிவாலயச் செய்திகளுக்கு கழுகாரை மடைமாற்றினோம்.

“கருணாநிதியின் சமாதிக்குச் சென்ற மு.க.அழகிரி, ‘என் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறேன்’ என்று பேட்டி கொடுத்தார். அதையடுத்து லேசான அதிர்வு ஏற்பட்டது.

ஆனால், ‘தர்மயுத்தம்’ அளவுக்குப் பெரிதாக எதையும் அசைக்கவில்லை. முடிந்த அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் முயற்சியாக செப்டம்பர் 5 அன்று கருணாநிதி சமாதியை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்போகிறார் அழகிரி. கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதுதான் ஒரே நோக்கம்.’’

“ஓஹோ!’’

‘’பேரணிக்கு அனுமதி கேட்டுக் கடிதம் கொடுக்கப்பட்டபோது, போலீஸ் தரப்பில் கேட்கப்பட்ட கேள்வி, எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்’ என்பதுதான். அதற்கு 50 ஆயிரம் பேர் என்று அழகிரி தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

‘50 ஆயிரம் பேரா… அறிவாலயத்தைக் கைப்பற்றப் போகிறீர்களா?’ எனக் கேட்டுள்ளனர் போலீஸ் தரப்பில். இது அழகிரி காதுகளுக்கு வந்ததும், ‘அது நம்முடைய அறிவாலயம். நாம் ஏன் கைப்பற்ற வேண்டும்’ என்று சொல்லிச் சிரித்துள்ளார்.

தனிக்கட்சி தொடங்கும் யோசனையெல்லாம் இல்லையாம். தி.மு.க-வை மேலும் வளர்க்க வேண்டும்; கட்சியை கம்பெனியைப் போல் நடத்தும் ஸ்டாலின் மற்றும் அவரின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோரைத் தட்டி வைக்கவேண்டும். சீனியர்களும், உண்மையாக உழைத்தவர்களும் ஒதுக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் இதெல்லாம்தான் அழகிரிக்கு முக்கியமாம்.’’

“அழகிரியைச் சேர்ப்பதில் ஸ்டாலினுக்கு என்ன பிரச்னை?’’

“அழகிரியைப் பார்த்து ஸ்டாலின் பயந்துவிட்டார் என்ற எண்ணம் கட்சிக்குள்ளும் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படும்; ஸ்டாலினின் செயல்பாடுகளில் அதிருப்தியாக உள்ள தலைவர்களும், தொண்டர்களும் அழகிரியை நாடிச் செல்வார்கள்;

கட்சிக்குள் இரண்டு தலைமைகள் உருவாகும்; தென் மாவட்டங்களில் அழகிரிதான் செல்வாக்கு மிக்கவராக வலம்வருவார்; அதைத் தடுக்க ஸ்டாலினால் முடியாது. இப்படிப்பட்ட பிரச்னைகள் தன்னைச் சூழ்வதை ஸ்டாலின் விரும்பமாட்டார். எனவே, அழகிரியை கட்சிக்குள் சேர்ப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை.’’

“அ.தி.மு.க தரப்பு செய்திகள் ஏதுமில்லையோ..?”

“ஆகஸ்ட் 20- ம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து ஏழுநாள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், 23-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதில், எட்டு மாதங்களாக இழுபறியாக இருக்கும் உறுப்பினர் சேர்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி முக்கியமாகப் பேசப்படுமாம்.

முக்கியமாக, தன் ஆதரவாளர்களுக்கான பதவிகள் பற்றிப் பொங்கப்போகிறாராம் பன்னீர். தன் அணியை எடப்பாடி அணியுடன் இணைத்து ஒரு வருடமாகியும் தன் ஆதரவாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் அவர் நெருக்கடியில் இருந்து வருகிறார்.”

“சசிகலாவைச் சந்தித்திருக்கிறாரே தினகரன்?’’

“சசிகலாவின் பிறந்த நாள் அன்று மனைவி, மகள் ஆகியோருடன் சசிகலாவைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் தினகரன். குடும்ப உறவுகளில் வேறு யாரும் அவரைச் சந்திக்கவில்லை. இதற்குக் காரணம்… அந்தக் குடும்பத்தில் கிளம்பியுள்ள அடுத்த புகைச்சல்தான்.’’

“அங்கே புகைச்சலுக்குப் பஞ்சமா என்ன?’’

“திவாகரன் ஏற்கெனவே போர்க்கொடி தூக்கிய நிலையில், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவும் தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

தினகரனின் கட்சியினர் தொடர்ச்சியாகத் தவறான கருத்துக்களைப் பகிர்ந்துவருவதாக, தன் முகநூல் பக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார் கிருஷ்ணப்ரியா.

‘தினகரன் ஒரு தீயசக்தி’ என்ற ரீதியில் விமர்சனத்தை முன்வைக்கவும் ஆரம்பித்துள்ளார். விரைவில் அரசியல் களத்திலும் அவர் இறங்க உள்ளாராம். இதற்கு சசிகலா தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’’ என்று சொல்லிக் கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார், ‘’தி.மு.க-வை வளைப்பதற்கு பி.ஜே.பி தரப்பிலிருந்து கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன’’ என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.

படம்: சு.குமரேசன்