`பாகுபலி’ டேனி, `ராஜமாதா’ மும்தாஜ், `ரோபோ’ பாலாஜி.. பிக் பாஸ் ஜித்து ஜில்லாடி மசாலாஸ்!

`நேருக்கு நேர்’ டாஸ்க் மூலம் யாஷிகாவும் மஹத்தும் தங்களது மனதில் இருந்ததை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்கள். அதைத் தொடர்ந்து விலங்குகளின் பெயரை வைத்து பிக் பாஸ் விருது விழாவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து மிட்நைட் மற்றும் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது?!

மும்தாஜ் - பாலாஜி - பிக்பாஸ் மிட்நைட் மசாலா

* மசாலாவின் ஆரம்பத்திலே காரம் சற்று தூக்கலாகத்தான் இருந்தது. சிட்டி ரோபோ கெட்டப்பில் பாலாஜியும், ராஜமாதா சிவகாமி தேவி கெட்டப்பில் மும்தாஜும், பாகுபலியாக டேனியலும் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்கள். டேனியல், மகேந்திர பாகுபலியா, அமரேந்திர பாகுபலியா என்பதுதான் குழப்பமாக இருந்தது. தவிர, கார்டன் ஏரியாவில் பிரமாண்டமாக ஒரு செட் போடப்பட்டிருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் முட்டைகளை வைத்து விளையாடியிருப்பார்கள் போல. வீடு முழுக்க முட்டை சிதறிக் கிடந்தது. சென்றாயன், அதை ஒவ்வொரு இடத்துக்கும் சென்று சுத்தம் செய்துகொண்டிருந்தார். கார்டன் ஏரியாவில் காற்று வாங்கிக்கொண்டிருந்த சிட்டி ரோபோவை (பாலாஜி) வம்புக்கு இழுத்துக்கொண்டிருந்தார், சென்றாயன். `பாலாஜி இல்லேன்னா வீட்டுல சிரிப்பும் காமெடியும் இருக்காது’ என்ற மற்ற போட்டியாளர்களின் பாராட்டுகளுக்கு, சென்டு ப்ரோதான் முழுக் காரணம். பாலாஜி, இவரை வைத்துதான் ஃபுல் கலாய் டிரெயினிங்கையும் எடுத்துக்கொள்கிறார்.

* நடந்து முடிந்த விளையாட்டில் ஐஸ்வர்யாவுக்குக் காலில் கடுமையாக அடிபட்டிருக்கும்போல. வலி தாங்கமுடியாமல் கண் கலங்கி புலம்பிக்கொண்டிருந்தவர், நொண்டிக்கொண்டே நடந்தார். கடந்த சில நாள்களாக சண்டை போட்டு முட்டிக்கொண்ட யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைந்துவிட்டனர். தனது வீட்டைப் பற்றியே பேச விரும்பாத ஐஸ்வர்யா, தனது அம்மாவை மிஸ் செய்வதாக யாஷிகாவிடம் அழுது புலம்பிக்கொண்டிருந்தார். யாஷிகா, இவரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் கூறியதோடு, சில அறிவுரைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார்.

* நேற்று விளையாடி முடித்துவிட்ட கலைப்பில், `கை வலிக்குது, கால் வலிக்குது, சுத்தமா முடியலை’ என ரித்விகாவிடம் கூறிக்கொண்டிருந்தார், யாஷிகா. `உனக்காவது கை கால்தான் வலி. எனக்கு டோட்டல் உடம்பே குளோஸ்’ என்று நக்கலாகச் சொல்லிக்கொண்டிருந்தார், ரித்விகா. யாஷிகாவைத் தொடர்ந்து, சென்றாயனிடம் வந்த ரித்விகா, ‘காலையில ஏன் ஜித்து ஜில்லாடி பாட்டுக்கு ஆடல’ என்று டான்ஸ் ஆடிக்கொண்டே கேட்டார். வழக்கம்போல் இவருக்கே உரித்தான ஸ்லாங்கிலும், பாடி லாங்குவேஜிலும், `ஏம்மா… நானே செத்து சில்லாகிட்டிருக்கேன். என்கிட்ட வந்து ஜித்து ஜில்லாடியாம்ல… போம்மா அந்தப் பக்கம்’ எனத் தலையில் துண்டு போட்டுக்கொண்டு செம காமெடியாக பதிலளித்தார், சென்றாயன்.

பிக் பாஸ்

* டேனியல், ஜனனி, சென்றாயன் மூவரும் கிச்சனில் ஆளுக்கொரு வேலையைக் கையிலெடுத்து, மிகுந்த ஈடுபாடோடு சமைத்துக்கொண்டிருந்தனர். ஜனனி, `வெளியில போவீங்களா?’ என சென்றாயனிடம் கேட்க, `ஆமா கமல் சார் கூப்பிட்டா போய்தான் ஆகணும்’ என்றார், சென்டு ப்ரோ. குபீரெனச் சிரித்த ஜனனி, `அந்த வெளில இல்ல. பாலாஜி அண்ணா கார்டன் ஏரியாவுல இருக்கார், அங்கே போனா அவர்கிட்ட காபி கொடுத்துடுங்க’ எனச் சிரித்துக்கொண்டே சொன்னார். பின்னர், மசாலா முடியும் வரை டேனியல் சமையல் செய்தது மட்டுமே திரையிடப்பட்டது. அவரும் குழம்பு, கூட்டு, பொறியல் என ரக ரகமாய் சமைத்துக்கொண்டிருந்தார்.

* நேற்று ஆரம்பித்த அந்த டாஸ்க், நேற்றே முடிந்துவிட்டதுபோல. மிட்நைட் மசாலாவில் நடந்த சில கலவரங்கள் மறுநாள் காலை மார்னிங் மசாலாவில் நிகழவில்லை. இந்த இரண்டு மசாலாவிலும் மஹத்தை ஒரு ஃப்ரேமில்கூட காட்டவில்லை. மனிதன் கன்டென்ட்டை வாரி இறைத்திருக்கிறார்போல. பிக் பாஸுக்கும் செம கொண்டாட்டமாய் இருந்திருக்கும். மஹத்தின் காதலி வேறு, தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஹத்தைப் பற்றி சில காரசார வார்த்தைகளோடு ஸ்டேட்டஸ் பதிவிட்டிருக்கிறார். முன்பு இருந்ததைவிட தற்போது மஹத் செய்துவரும் சில செயல்கள் விநோதமாகத்தான் தெரிகிறது. வெளியுலகத்தைப் பார்க்காமல், ஒரே இடத்துக்குள் அடைபட்டுக் கிடந்தால் உணர்வுகள் இப்படித்தான் வெளிபடும். இதைச் சிலர் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவார்கள், மஹத்தைப் போல் சிலருக்கு அது வெடித்துச் சிதறியும்விடும்.

யாஷிகா - ஐஸ்வர்யா

ஆக, ஆரம்பித்த அறுபத்து ஐந்து நாள்கள் கழித்துதான் இதுபோன்ற சுவாரஸ்யமான சில சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. போட்டியாளர்களின் உண்மை முகங்களும் வெளிச்சத்துக்கு வருகின்றன. பிக் பாஸ் தொடர்பான உரையாடல்கள், `இருந்தாலும் இந்த மஹத் ஓவரா பண்றான் மச்சான்’ எனத் தற்போதுதான் டீக்கடை பெஞ்சுகளையும் எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து பார்ப்போம்!