வாள்வெட்டுக் கும்பலின் பார்வையில் சிக்கிய குழந்தை; தாய் பதற்றத்தில்!

சுதுமலை பகுதியில் ஒரு வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட கும்பல் தாவடியில் ஒரு வீட்டினுள்ளும் புகுந்தது. வீட்டின் கேற்றை சேதப்படுத்தியபடி நுழைந்த கும்பலை பார்த்ததும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டினுள் சென்று பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த இரும்புக் கேற்றை பூட்டியுள்ளனர்.

அங்கு வாள்களுடன் 9 பேர் கொண்ட குழு முகங்களை மறைத்தவாறு நுழைந்து முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியதுடன் வீட்டின் யன்னல்களையும் நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வீட்டினுள் நுழைய முற்பட்டும் முடியாமல் போனதால் ஆத்திரமடைந்த கும்பல் வெளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு யன்னல் ஓரத்தில் ஏணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையையும் படம் எடுத்துச் சென்றுள்ளனா். வீட்டினுள் நுழையமுடியாதமையால் வீட்டின் உரிமையாளரை மிரட்டியதோடு அவரையும் படம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து இணுவில் மஞ்சத்தடியில் ஒரு வீட்டினுள் புகுந்த கும்பல் அவ் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் செல்லும் வழியில் ஓர் முச்சக்கரவண்டி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தை வீதியில் நின்ற அனைவரும் அவதானித்துள்ளதோடு வன்முறையில் ஈடுபட்டவர்கள் 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்தனர்.

அத்தோடு நிறுத்தி விடாது இணுவில் பிரதேசத்தில் இரு வர்த்தக நிலையங்கள் மற்றும் இரு முச்சக்கர வண்டிகள் மீதும் தாக்குதல் மேற் கொண்டுள்ளனர்.

இதேவேளை யாழில் வன்முறைகளை கட்டுப்படுத்தியுள்ளோம் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்துள்ளோம் என பொலிஸார் தெரிவித்த பின்னர் நடைபெறும் இரண்டாவது சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.