விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட தெற்கு நைஜீரியாவிலுள்ள உபாங் சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் வெவ்வேறு மொழிகளை பேசுவதாக கூறுகின்றனர். இந்த வினோதமான வேறுபாட்டை “கடவுள் அளித்த ஆசீர்வாதமாக” அவர்கள் நினைக்கின்றனர்.
ஆங்கிலத்தின் மோகம் அந்த சமூகத்தின் இளைஞர்களிடைய அதிகரித்து வரும் நிலையில், இந்த மொழிகள் விரைவில் அழிந்துபோகும் என்ற கவலை நிலவுவதாக கூறுகிறார் பிபிசியின் எமிஸி அடெகோக்.
இவ்விரு மொழிகளுக்கிடையேயான வேறுபாட்டை நமக்கு கற்றுத்தருவதற்காகவே பிரகாசமான நிறத்திலான தங்களது பாரம்பரிய உடையில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆர்வத்துடன் இருந்தார் அந்த சமூகத்தின் தலைவரான ஆலிவர் இபாங்.
அவர் ஆங்கிலத்தில் சேனைக்கிழங்கை குறிக்கும் சொல்லான ‘யாம்’ என்று தன்னுடைய பெண் குழந்தையிடம் கூறினார்.
சற்றும் யோசிக்காத அந்த சிறுமி, ‘இருய்’ என்று கூறினார்.
நைஜீரியாவின் பிரதான உணவான சேனைக் கிழங்குக்கு உபாங் ஆண்கள் மொழியில் “இட்டாங்” என்று பெயர்.
உடைக்கு, ஆண்கள் மொழிகள் “ங்கி”, பெண்கள் மொழியில் “அரிகா” போன்று பல்வேறு உதாரணங்கள் உள்ளன.
ஆண், பெண் இரு மொழிகளிலும் வார்த்தைகள் வித்தியாசப்படுவது எத்தனை சதவிகிதம் என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை. பொதுவாக வார்த்தை வேறுபாடுகள் ஆண்கள், பெண்கள் வகிக்கும் பாத்திரங்களோடு தொடர்புடையவையா என்றும் தெரியவில்லை.
“இது கிட்டத்தட்ட இரண்டு வித்தியாசமான அகராதிகளாகும்” என்று கூறுகிறார் இந்த சமூகத்தை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட சி சி உண்டை.
“ஆண்களும், பெண்களும் பொதுவாக பேசும் பல வார்த்தைகள் உள்ளன. ஆனால், அதே சமயத்தில் பாலினத்தை பொறுத்து முழுவதும் வேறுவிதமான வார்த்தைகளை பயன்படுத்தும் நிலையும் உள்ளது” என்று கூறுகிறார்.
‘முதிர்ச்சியின் அடையாளம்’
உதாரணமாக அமெரிக்க ஆங்கிலத்திற்கும், பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை விட அதிகளவிலான வேறுபாடு இவ்விரு மொழிகளுக்கிடையே நிலவுவதாக அவர் கூறுகிறார்.
ஆனால், ஆண்கள்/ பெண்களால் மற்றவரின் மொழியை சரியாக புரிந்துகொள்ள முடிகிறது.
ஆண் குழந்தைகள் தங்கள் வளரும்வரை குறிப்பிட்ட காலத்தை தங்களது தாய், மற்றும் பெண்களுடன் செலவிடுவதால் அவர்களுக்கு பெண்களின் மொழி இயல்பாகவே தெரிய வாய்ப்பு உண்டாவதாக இபாங் கூறுகிறார்.
பத்து வயதாகும்போது சிறுவர்கள், ஆண்களின் மொழியை பேசவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறுகிறார்.
“ஒரு சிறுவன் தான் சரியான மொழியை பேசவில்லை என்று தெரிந்துகொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டம் உள்ளது. அதுவரை, அந்த சிறுவன் தனது மொழியை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று யாரும் கூறமாட்டார்கள்.”
“ஒரு சிறுவன், ஆண்களுக்கான மொழியை முழுவதுமாக பேச ஆரம்பிக்கும்போது, அவனுக்கு முதிர்ச்சி ஏற்படுவதாக கருதப்படுகிறது.”
“ஒரு குழந்தை குறிப்பிட்ட வயதிற்குள் மொழியை சரியான பயன்படுத்தவில்லை என்றால் அது “இயல்பற்ற” ஒன்றாக கருதப்படுவதாக அவர் மேலும் கூறுகிறார்.
உபாங் மக்கள் தங்களது மொழிகளில் நிலவும் வேறுபாடு குறித்து மிகவும் பெருமையடைவதுடன், அதை தங்களது தனித்துவத்தின் குறியீடாக பார்க்கிறார்கள்.
ஆனால், இது நிகழ்ந்தது என்பது குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. பெரும்பாலான சமூகங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தை கொடுக்கின்றன.
“கடவுள் முதன் முதலில் உருவாக்கிய ஆதாம், ஏவாள் ஆகியோர் உபாங் சமூகத்தை சேர்ந்த மக்கள்” என்று அந்த சமூகத்தின் தலைவர் கூறுகிறார்.
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இரண்டு மொழிகளை உருவாக்குவதற்கு கடவுள் திட்டமிட்டதாகவும், ஆனால் உபாங் சமூகத்துக்கு இரண்டு மொழிகளை உருவாக்கிய பிறகு, மற்ற அனைத்து சமூகத்திற்கும் இரண்டு மொழிகளை உருவாக்குவதற்கு போதுமான மொழிகள் இல்லை என்பதை அறிந்ததாக அவர் மேலும் கூறுகிறார்.
“அத்துடன் கடவுள் நிறுத்திவிட்டார். அதனால்தான் இரண்டு மொழிகளை பெறும் வாய்ப்பை உபாங் சமூகத்தினர் பெற்றனர்.”
‘இரட்டை பாலின கலாச்சாரம்’
“இரட்டை பாலின கலாச்சாரம்” என்று உண்டை கூறுகிறார்.
“ஆண்கள் மற்றும் பெண்கள் கிட்டத்தட்ட இரண்டு தனித்துவமான உலகங்களில் இயங்குகிறார்கள். அவர்கள் தனி உலகங்களில் இருப்பதைப் போலவே இருக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அந்த உலகங்கள் ஒன்று சேர்ந்து வந்துள்ளன. அந்த மொழியிலும் அதே பாணியை நீங்கள் காணலாம்.”
தனது கோட்பாடு அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில்களை கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
“நான் இதை கோட்பாடு என்று கூறுகிறேன், ஆனால் இது முழுமையற்றதாக உள்ளது” என்று ஒப்புக்கொள்கிறார். “நைஜீரியாவில் நிறைய இரட்டை பாலின கலாசாரங்கள் உள்ளன. ஆனால், வேறெந்த மொழியும் இதுபோன்ற கலாசாரத்தை கொண்டிருக்கவில்லை.”
இந்நிலையில், இந்த மொழிகளின் தொடர் பயன்பாட்டை பற்றிய கவலை எழுந்துள்ளது.
“இவ்விரு மொழிகளுமே இதுவரை எழுதப்படவில்லை. இளைய தலைமுறையினர், அடுத்த தலைமுறைக்கு மொழியை கடத்துவதையே நம்பியுள்ளார்கள். ஆனால், சமீப காலமாக சில இளைஞர்கள் இரண்டு மொழிகளையுமே சரியாக பேசாத சூழல் நிலவுகிறது.
“அந்த நிலைப்பாட்டை தற்போதைய இளம் தலைமுறையினரிடையே காண முடிகிறது” என்கிறார் உயர்நிலை பள்ளியொன்றின் ஆசிரியரான ஸ்டீவன் ஓச்சு.
“மாணவர்கள் ஆங்கில மொழி கலப்பில்லாமல், உபாங் மொழியை பேசுவது என்பது அரிதாகி வருகிறது.”
‘அச்சுறுத்தலில் தாய்மொழிகள்’
இதே நிலைதான் நைஜீரியா முழுவதுமுள்ள மற்ற மொழிகளுக்கும் நடந்து வருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு நைஜீரியா மொழியியல் சங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், குறிப்பிடத்தக்க நடவடிக்கைளை எடுக்கவில்லை என்றால் அந்நாட்டிலுள்ள 500 மொழிகளில் 50 மொழிகள் அடுத்த சில வருடங்களில் அழிந்துவிடும் என்று கூறியிருந்தது.
யொரூபா, இக்போ, ஹவுசா ஆகியவை நைஜீரியாவின் முக்கியமான மொழிகள். பல்வேறு இன குழுக்களை கொண்ட நைஜீரியாவில் ஆங்கிலம்தான் இணைப்பு மொழியாக செயல்படுகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள மூன்று மொழிகளில்தான் நைஜீரியாவிலுள்ள பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்படுகிறது.
நைஜீரியாவின் தேசிய கல்வி கொள்கையில், “ஒவ்வொரு குழந்தையும் உடனடி சூழலின் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளதே தவிர அது உபாங் போன்ற மொழிகளுக்கு செயல்படுத்தப்படவில்லை.
ஆங்கிலத்தை பேசவேண்டும் என்று இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் முயற்சி அவர்களது தாய்மொழியை அழிக்கும் ஒன்றாக மாறிவிடுமோ என்று அச்சப்படுவதாக ஓச்சு கூறுகிறார்.
“எங்களது பகுதியிலுள்ள பள்ளிகளில் மாணவர்கள் அவர்களது தாய்மொழியை பேசினால் அடிக்கப்படுகிறார்கள், பல நேரங்களில் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று அவர் கூறுகிறார்.
“ஒரு குழந்தை தனது தாய்மொழியை பேசியதற்கு அதை தண்டித்தால் அந்த மொழி தொடர்ந்து வாழாது.”
‘பாடப்புத்தகங்கள் வேண்டும்’
உபாங் மொழியை காப்பாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று ஓச்சு கூறுகிறார்.
“பாடப்புத்தகங்கள் உபாங் மொழிகளில் உருவாக்கப்பட வேண்டும். அதில் நாவல்கள், கலை, திரைப்படங்கள் போன்றவற்றை அதன் வழியே அறியும் வாய்ப்பை உண்டாக்க வேண்டும்.”
உபாங் மொழிகளின் தனிசிறப்புகளை விளக்கும் வகையில் ஒரு நிறுவனம் அமைக்கப்படுமென்று கனவு காண்கிறார் அந்த சமூகத்தின் தலைவர்.
இந்த மொழிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று உறுதிபட தெரிவிக்கிறார்.
“உபாங் மொழிகள் இறந்தால், அதன் மக்களும் இருக்கமாட்டார்கள்,” என்கிறார் அவர்.