சென்னை வில்லிவாக்கம் முருகேசன் நகரில் வசிப்பவர் ஜேக்கப். இவரது மனைவி விமாலா. இவர்கள் இருவரும் அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் சியான் தெருவில் கடந்த 20 வருடங்களாக நித்திய வார்த்தை என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருகிறார்கள்.
இங்கு காப்பாளர்களாக அயனாவரத்தைச் சேர்ந்த பாஸ்கர், சாமுவேல் மற்றும் காப்பகத்திலேயே தங்கி உதவியாளராக முத்து வேலை செய்துள்ளனர்.
இங்கு ஏழை மற்றும் ஆதரவற்ற மாணவ, மாணவிகள் தங்கி திருமுல்லைவாயில் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் காப்பக மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில், குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி அனிதா ஆனந்த் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அப்போது காப்பகத்தில் விடுதி காப்பாளர்கள் பாலியல் தொந்தரவு செய்வதுடன், அடித்து துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர்.
அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரில் சென்று விசாரிக்க நீதிபதிஉத்தரவிட்டார்.
இதையடுத்து அலுவலர் செந்தில் காவல் துறையினருடன் காப்பகத்திற்கு சென்று அங்கு தங்கியுள்ள மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் விடுதி காப்பாளர்கள் சாமுவேல், பாஸ்கர், உதவியாளர் முத்து ஆகியோர் நாள்தோறும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகவும், அடித்து துன்புறுத்திவந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து செந்தில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து,
காப்பகத்தின் உரிமையாளர் விமலா, கணவர் ஜேக்கப், காப்பாளர் பாஸ்கர், உதவியாளர் முத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு விடுதி காப்பாளர் சாமுவேலை தேடிவருகின்றனர்.
இதனிடையே காப்பகத்தில் தங்கி இருந்த 26 மாணவிகளை ஆரிக்கம் பேட்டில் உள்ள மரியாலாய பாதுகாப்பு இல்லத்திலும், 22 மாணவர்களை சியான் பாதுகாப்பு இல்லத்திற்கும் அனுப்பி வைத்தனர்.